காரைக்கால் அம்மையார் திருமணம்! பக்தர்களுக்கு அனுமதி இல்லை! புதுச்சேரி முதல்வரும் முக்கிய மந்திரிகளும் பங்கேற்றனர்!

சற்றுமுன் தமிழகம்
karaikal

காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அம்மையார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பின்றி இன்று எளிமையான வகையில் நடைபெற்றது.

63 நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் சிறப்பிடம் பெற்றவரும், பெண் நாயன்மாரும், சிவபெருமானால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்டவரும், ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது. இக்கோயிலில் அம்மையாரின் வரலாற்றை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா மிகவும் சிறப்புப் பெற்றதாகும்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமலில் உள்ளதால் காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பில் நடத்தப்படும் மாங்கனித் திருவிழாவை பக்தர்கள் பங்கேற்பின்றி எளிய முறையில் கைலாசநாதர் கோயிலுக்குளேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று (ஜூலை 1) மாலை மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு வைபவத்துடன் மாங்கனித் திருவிழா தொடங்கியது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

விழாவின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான காரைக்கால் அம்மையார்- பரமதத்தர் திருக்கல்யாண வைபவம் இன்று (ஜூலை 2) காலை 9 முதல் 10.30 மணிக்குள் நடைபெற்றது. வழக்கமாக அம்மையார் கோயில் மணிமண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். இன்று கைலாசநாதர் கோயிலில் நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவத்தையொட்டி கோயில் மகா மண்டபத்துக்கு புனிதவதியார் எழுந்தருளினார். பின்னர் பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் வந்தடைந்ததும், திருக்கல்யாண நிகழ்வுகள் தொடங்கின.

சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார்கள் எடுத்துக் காண்பித்து, வைபவத்தில் பங்கேற்றிருந்தோர் முன்னிலையில் அம்மையாருக்கும், பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்தோர் அட்சதை தூவி அம்மையாரை வழிபட்டனர். பின்னர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனைக் காட்டப்பட்டு,16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன.

இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மாநில அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.கந்தசாமி, ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.ஏ.யு.அசனா, கீதா ஆனந்தன், சந்திர பிரியங்கா, கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரிய நிர்வாகிகள், உபயதாரர்கள், சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

நாளை (ஜூலை 3) மாலை 3.30 மணிக்கு பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகம், நாளை மறுநாள் (ஜூலை 4) காலை 11.30 மணிக்கு பிச்சாண்டவர் கோயில் உள் பிரகாரத்தில் புறப்பாடு (மாங்கனி இறைத்தல் வைபவம்), மதியம் 12.15 மணிக்கு காரைக்கால் அம்மையார் மாங்கனியுடன் சிவபெருமானுக்கு அமுது படைத்தல் நிகழ்வு, இரவு 8 மணிக்கு பரமதத்தருக்கு இரண்டாவது திருமண நிகழ்வு உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் கோயில் இணையதளம் (www.karaikaltemples.com), யூ டியூப் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.