தொடரும் தென்மேற்கு பருவமழை: அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு

சற்றுமுன் சுற்றுலா திருச்சி
amaravathi dam
amaravathi dam

கரூர்: தொடரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அமராவதி அணையின் நீர்மட்டம், 30 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், கரூர் மாவட்ட விவசாயிகள் சாகுபடி பணிகளை துவங்க உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் அமராவதி அணை உள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையில், 4,047 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும்.

இதன் மூலம், கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில், 57 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அதில், கரூர் மாவட்டத்தில் மட்டும், 22 ஆயிரம் ஏக்கரில், மஞ்சள், வாழை, நெல், சூரியகாந்தி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

மேலும், அரவக்குறிச்சி, க.பரமத்தி, கரூர், தான்தோன்றி மலை யூனியன் பகுதிகளின், குடிநீர் ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. கேரளா மாநிலம் உள்ளிட்ட, அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததால் கடந்த, ஒரு வாரமாக தண்ணீர் வரத்து, ஒற்றை இலக்கை தாண்டவில்லை.

இதனால், வரும் ஆடி மாதம் நெல் சாகுபடி செய்ய முடியுமா என்ற கவலையில் இருந்தனர். ஆனால், நேற்று முன்தினம் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு வினாடிக்கு, 89 கன அடி தண்ணீர் வந்தது. கடந்த ஜூன், 1ல் அமராவதி அணையின் நீர்மட்டம், 25.26 அடியாக இருந்தது.

நேற்று காலை, 30.02 அடியாக உயர்ந்துள்ளது. வழக்கமாக இம்மாத இறுதியில், நெல் சாகுபடிக்காக, அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.

அமராவதி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தழைச் சத்துக்காக, அவுரி பயிரை சாகுபடி செய்ய, அமராவதி ஆற்றுப்பாசன விவசாயிகள் முழுவீச்சில் இறங்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.