
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வாகனத்தில் துரத்தி யானையை சீண்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி நடுவே சாலை செல்கிறது.
இச்சாலையில் செல்பவர்களை வன விலங்குகள் தாக்காமல் இருப்பதற்கும், வன விலங்குகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சாலையில் வாகனத்தை நிறுத்தவோ, சாலை ஓரங்களில் நடமாடும் வன விலங்குகளுக்கு தொல்லை கொடுக்கவோ கூடாது என வனத்துறை கட்டுப்பாடு விதித்து உள்ளது.
இதனை மீறுபவர்கள் மீது வனத்துறையினர் அபராதம் விதித்தும் வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊட்டியை சேர்ந்த சுஜீன் மற்றும் அவரது 2 நண்பர்கள் மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு நேற்று முன்தினம் இரவில் ஜீப்பில் சென்றனர்.
அப்போது சீகூர் பாலம் அருகே சாலையில் எதிரே வந்த ஒற்றை யானையை வழி மறித்தது. அது கோபம் அடையும் வகையிலும், யானையை அச்சுறுத்தும் வகையிலும் சுஜீன் வாகனத்தை இயக்கி சீண்டியுள்ளார். மேலும் இவர்களிடம் இருந்து தப்பி சென்ற யானையை வாகனத்தில் துரத்தினர்.
இது குறித்த வீடியோ காட்சி வனத்துறையினரிடம் சிக்கியது. பின்பு விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் இரவு நேரத்தில் யானையை விரட்டி அத்துமீறலில் ஈடுபட்ட சுஜீனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் இது போன்று இனி வனவிலங்குகளிடம் அத்துமீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்