இன்று முதியோர் தினம் – அனுபவத்தின் சாரம்

சற்றுமுன்

அனுபவத்தின் சாரம்
-ஜெயஸ்ரீ எம். சாரி,
நாக்பூர்

இன்றைய இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் ‘கூகுள் பாபா’ என்னும் வலைத்தளமானது ஒரு க்ளிக்கில் அனைத்து விஷயங்களையும் அளிக்கிறது. இப்போது இருக்கும் நடுத்தர வயதினர்கள், அவர்களின் இளம் பருவத்தில் அவர்களின் அவர்களருகிலிருந்தவர்களான ‘அனுபவ பாபா’ என்னும் பெரியவர்களே, அவர்களின் ‘தகவல் பாபா’.

முதியோர்களின் சொல்லும், செயலுமே அனைவருக்கும் வழிகாட்டுவதாய் இருந்தது, பலருக்கு இன்றும் பயன் தருகிறது.

எங்கள் குடியிருப்பில் இருந்த பெரியவர் ஒருவர், எவரையும் குற்றம் கூற மாட்டார். அவரின் கருத்துப்படி அடுத்தவரிடம் இருந்து நல்லதையும், நேர்மறை எண்ணங்களையுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்களை நாம் அன்னைப்பறவையை போல பாலை மட்டும் குடித்து தண்ணீரை வைத்து விடுவதைப் போல அவர்களிடமே விட்டு விட வேண்டும்.
என் மாமனாரோ கணவன்- மனைவியின் புனித உறவை பற்றி குறிப்பிடும் போது," நாம் வணக்கம் செலுத்தும் வகையில் கையை வைத்துக் கொண்டு, இரண்டு கட்டை விரல்களிலிருந்து திறந்து மூட வேண்டும். அவ்வாறு செய்யும் போது மோதிர விரல்களில் ஒருவித வலி ஏற்படும். திருமண பந்தத்தில் இருவரும் அவ்வாறான சில வலிகளை பொறுத்துக் கொள்ள வேண்டும்," என்றார்.
எங்கள் வீட்டருகில் இருந்த வயதானப் பெண்மணியோ, விவசாயிகளிடம் நாம் பொருட்கள் வாங்கும் போது பேரம் பேசக் கூடாது. அவர்களின் உழைப்புக்கு முன்னால் காகிதப் பணத்திற்கு மதிப்பே கிடையாது, என்பார்.
"அவரவர் குழந்தைகளின் முகத்தினை நோக்கினால் கஷ்டமான நேரத்திலும் மனது இளகிவிடும்," என்பது என் அன்னையின் கண்ணோட்டம்.
இக்காலப் பெற்றோரின் பெரும் கவலையே குழந்தைகளின் பருமன் தான். அதற்கும் ஒரு அருமையான வழியினை என் தாத்தா கூறினார். வாரத்தில் நான்கு நாட்கள் பசிக்காகவும், மூன்று நாட்கள் ருசிக்காவும் சாப்பிட்டால், குடும்ப ஆரோக்கியத்துடன் சேமிப்பும் வளரும்.
நான் எப்பொழுதாவது கொஞ்சம் களைப்படைந்தாலோ, என்னை யாராவது தேவையில்லாமல் குறைக்கூறிப் பேசினாலோ, என் தந்தை சொல்லும் "மூலிகையின் மகிமை அது வளரும் மலைக்கு தெரியாது. அதனை உபயோகப்படுத்துபவருக்கே அதன் அருமை தெரியும்," என்ற மந்திரமே என் மனதிடத்தை பலப்படுத்தும். இன்றைய தலைமுறையினர்
மூத்த குடிமக்களின் அனுபவத்தின் சாரத்தையும், வாழ்க்கை அனுகுமுறையையும், நேர்மறை சக்தியையும்
பின்பற்றுவதே நாம் அவர்களுக்கு உலக முதியோர் தினத்தன்று செய்யும் நன்றிக்கடனாகும். முதுமையைப் போற்றியும், அவர்களின் வழிகாட்டலின் அருமையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பெரும் பொறுப்பு நம்மிடமே உள்ளது என்றால் மிகையாகாது.

IMG 20201001 WA0011 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.