bomb threat 1
bomb threat 1

முதல்வரை வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் என, போலீஸ் கமிஷனருக்கு, ரத்த கையெழுத்திட்ட கடிதம் வந்ததால், இளைஞர் ஒருவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமாருக்கு, கடந்த மார்ச், 29ல் ரத்த கையெழுத்திட்ட கடிதம் வந்தது. அதில், ‘சேலத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் முதல்வர் பழனிசாமி, சேலம் கலெக்டர் ராமன் ஆகியோரை, குண்டு வெடிக்கச்செய்து கொலை செய்வோம்’ என, எழுதப்பட்டிருந்தது.

நுண்ணறிவு போலீசார் விசாரணையில், கடிதம் எழுதியது, சீல்நாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தமிழரசன், 38, என தெரிந்தது. கடிதத்தில், தேவி உள்பட ஆறு பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

நேற்று காலை, அன்னதானப்பட்டி போலீசார், தமிழரசனை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர். உண்மையில் தமிழரசன் எழுதினரா, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் யாரேனும் எழுதினரா? வேறு யாரேனும், இவர்களை பழிவாங்கும் நோக்கில் எழுதினரா என, விசாரணை நடக்கிறது. பிரசாரத்துக்கு, முதல்வர் அடிக்கடி சேலம் வந்து செல்லும் நிலையில், ரத்த கையெழுத்திட்ட, மிரட்டல் கடிதத்தால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால், நேற்று இரவு, சேலம் வந்த முதல்வர், இன்று பிரசாரம் மேற்கொள்ளும், கோட்டை மைதானம், நாளை பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில், போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க, உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: சீல்நாயக்கன்பட்டி, ‘சுபம்’ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த, தமிழரசன், சில மாதங்களுக்கு முன், வீட்டை காலி செய்துள்ளார். அங்கிருந்தவர்களுக்கும், இவருக்கும் முன்பகை இருந்தது. அவர்களை பழி வாங்குவதாக மிரட்டியிருந்தார்.

அதற்காக, முதல்வரை கொல்வதாக கடிதம் எழுதி, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாரா என விசாரணை நடக்கிறது. அதேநேரம், முதல்வர் பிரசாரத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில், வேறு யாருடைய தூண்டுதலில் கடிதம் எழுதப்பட்டதா எனவும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending