
தமிழகத்தில் தேர்தல் பரப்புரை ஓய்ந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பெரும்பாலான கட்சிகள் பணப்பட்டுவாடாவில் இறங்கியுள்ளன. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பி.கே.புரம் பகுதி தேர்தல் பறக்கும்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் தேர்தல் பறக்கும்படை குழுவினர் ஒரு காரில் குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரி எதிர்பாரத விதமாக பறக்கும்படையினரின் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து நொறுங்கியது.

விபத்து சத்தம் மற்றும் அதில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடிச்சென்றனர். அப்போது காரில் போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டனர். ஆனால் தேர்தல் பறக்கும் படையில் இடம்பெற்றிருந்த வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பெண் தலைமைகாவலராக பணியாற்றி வந்த மாலதி(45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த ஒளிப்பதிவாளர் பிரகாஷம் மற்றும் துணை ராணுவ வீரர் மனோஜ் உள்ளிட்ட மூன்றுபேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் செய்து ஆய்வு செய்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கே.வி.குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.