Raghupati - 2026

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்துள்ள வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன்.

இவரது மகன் ராபின் என்கிற ரகுபதி. வயது 23 ஆகிறது. நர்சிங் முடித்துவிட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்துவந்த ரகுபதி, கடந்தாண்டு கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, பணியிலிருந்து விலகி சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.

பெற்றோர் அவருக்கு சொந்த கிராமத்திலேயே மாட்டுத்தீவன கடை வைத்துக் கொடுத்துள்ளனர். தினமும் கடைக்கு வந்து வியாபாரத்தை கவனித்துக்கொள்ளும் ரகுபதி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பெண்கள் பலருக்கு காதல் வலை வீசியிருக்கிறார்.

அப்படி வீசிய வலையில், ஆம்பூர் அருகேயுள்ள ஓர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ரகுபதிக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது.

அந்த சிறுமியை காதல் வயப்படுத்திய அந்த இளைஞர், கடந்த மாதம் 18-ஆம் தேதி வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் கடத்திச் சென்றிருக்கிறார். மகளைக் காணாத பெற்றோர், பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். பின்னர், ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

சிறுமி செல்போன் பயன்படுத்தியதாகப் பெற்றோர் கொடுத்த தகவலால், தாலுகா போலீஸார் சைபர் கிரைம் உதவியை நாடினர். ஒரே எண்ணிலிருந்து வந்த அழைப்பில், அந்த சிறுமி தொடர்ந்து உரையாடியிருப்பதும், எதிர் முனையில் பேசிய நபர் ரகுபதி என்பதனையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

ரகுபதியைப் பிடிக்க அவரின் வீட்டுக்குச் சென்றபோது, அவரின் பெற்றோரும் தங்கள் பிள்ளையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில், செல்போன் சிக்னல் மூலம் திருவண்ணாமலை அருகே நண்பன் வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து ரகுபதி பதுங்கியிருப்பதைப் போலீஸார் கண்டுபிடித்தனர்.

திருவண்ணாமலைக்கு விரைந்த போலீஸார், சிறுமியை மீட்டு ரகுபதியை மடக்கிப் பிடித்தனர். இவ்வழக்கு ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டதால், தாலுகா போலீஸார் ரகுபதியை அங்கு ஒப்படைத்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending