alok kumar - 2026

கோயில் நகைகளை உருக்கி கட்டிகளாக்கி வங்கிகளில் டெபாசிட் செய்யும் தமிழக அரசின் முயற்சி கண்டிக்கத் தக்கது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் அலோக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோரிக்கை விடுத்தார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் அலோக்குமார் சென்னையில் திங்கள் அன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க இந்தியா முழுவதும் சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரினார்.

மேலும் அவர் கூறியதாவது… இந்தியாவில் கட்டாய மதமாற்றத்தின் மூலம் மதம் மாறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கட்டாய மதமாற்றத்தை தடுக்க 11 மாநிலங்கள் சிறப்பு சட்டம் இயற்றி உள்ளன.

இந்த தடைச் சட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசை விஸ்வ ஹிந்து பரிஷத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, போலி வாக்குறுதிகள், பண முதலீடு, மிரட்டல் போன்றவற்றின் மூலம் மதமாற்றம் நடக்கிறது. மதமாற்றத்தைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்துமத தலைவர்களை சந்தித்து வலியுறுத்தி வருகிறோம்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

தமிழக அரசு இந்து கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக்கி அதனை வங்கிகளில் வைத்து அதன் மூலம் கிடைக்கும் வட்டியை கோவில் பணிகளுக்கு செலவிடும் முயற்சி கண்டிக்கத்தக்கது. இந்த முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். பக்தர்கள் கோவிலுக்கு அளித்த நன்கொடை மத நம்பிக்கை சார்ந்தது. இது காலம் காலமாக நடந்து வரும் சம்பிரதாயம். இதில், அரசு தலையிட உரிமை இல்லை.

மாநில அரசு ஒருபோதும் இந்து கோவில்கள் மீது உரிமை கொண்டாடக்கூடாது. கோவில் விவகாரங்களில் குறைந்தபட்ச தலையீடு மட்டுமே அரசுக்கு இருக்கும் வகையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து கோவில்கள், மடங்களை இந்து சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்து கோவில்களை அரசு விடுவிக்க நாடு தழுவிய முயற்சியை விஸ்வ ஹிந்து பரிஷத் மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக நாடு முழுவதும் இந்து மத தலைவர்கள்,மடாதிபதிகளை சந்திக்க இருக்கிறோம்… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending