கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாந்தேட்
” எங்கெங்கு காணினும் சக்தியடா ‘என்று அனைவராலும் உணரப்படுகின்ற பண்டிகை தான் நவராத்திரி. இந்தியாவில் இன, மொழி, சாதி பாகுபாடின்றி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரும் கொண்டாடும் பண்டிகையே நவராத்திரி.
அனைத்து மாநிலத்தவரும் தத்தம் கலாசாரத்திற்கு ஏற்றவாறு தேவியை ஒன்பது நாட்களும் வணங்கி மகிழ்கின்றனர். இந்நாட்களில் பல மாநிலத்தவரும் ஒன்றாக வசிப்பதனால் கலாச்சார பரிமாற்றம், பண்பாடு பரிமாற்றம் என்பதை நல்ல முறையில் காண முடிகிறது.
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் கொலுவிற்கு தங்கள் பாடல்களினாலும், பஜன்களாலும் ஆராதனை செய்யும் வட நாட்டை சேர்ந்த பெண்களை காண முடிகிறது.
இதனால், தமிழ்நாட்டின் கொலுப் பற்றிய வரலாறும், வட நாட்டின் பஜனை முறைகளும் பகிரப்படுகின்றன, ரசிக்கப்படுகின்றன.
மஹாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரிலும் தமிழர்கள் மூன்று தலைமுறையாக கொலு வைத்து தேவியை மராட்டியர்களுடன் கொண்டாடுகின்றனர். திருமதி. மஹாக்ஷ்மி ஸ்ரீநிவாஸன் குறிப்பிடுகையில் ” மராட்டிய மக்களும் மிகவும் சிரத்தையுடன் தமிழர்களின் இல்லங்களுக்கு வந்து கொலுவினை தரிசிப்பர்.
மராட்டியப் பெண்கள் லலிதா சஹஸ்ரநாமம், தேவி அஷ்டோத்திரம் போன்ற ஸ்லோகங்களையும் எங்களுடன் சேர்ந்து பாடி மகிழ்கிறார்கள். ஒவ்வொரு பொம்மையைப் பற்றிய விபரங்களை ஆர்வமுடன் கேட்டறிந்து கொள்வார்கள். சுண்டலை பிரசாதமாக கொலுவிற்கு படைப்பதின் முக்கியத்துவத்தை விளக்கியபோது நமது முன்னோர்களின் வழக்கத்தை புகழ்ந்தனர். சுண்டல், அரிசிப் புட்டு, நம் ஊர் குணுக்கு முதலிய பண்டங்களையும் மராட்டியர்கள் நவராத்திரி பிரசாதத்தில் விரும்புவார்கள்,” என்றார்.
மஹாராஷ்டிர இளந்தலைமுறையினரும், குழந்தைகளும் கொலு பொம்மைப் பெட்டிகளை இறக்குவதில் இருந்து கொலுப்படி அமைப்பது, கொலு பொம்மைகளை வரிசையாக அடுக்குவது வரை பல்வேறு உதவிகளை செய்வதையும் இங்கு பார்க்க முடிகிறது.
மாஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தேவி பீடங்கள் மற்றும் நவராத்திரி கொண்டாடப்படும் முறைகளை பற்றி மராட்வாடா பகுதியை சேர்ந்த நாந்தேட் என்னும் ஊரைச் சேர்ந்த ஷைலா ஜோஷி-மாலேகாவ்கர் கூறும்போது “மஹாராஷ்டிர மாநிலத்தில் கோலாப்பூரில் வீற்றுள்ள மஹாலெக்ஷ்மி, மாஹூரில் அருள் பாலிக்கும் ரேணுகா தேவி, துல்ஜாபூரில் அரசாட்சி செய்யும் துல்ஜா பவானி – ஆகிய வழிப்பாட்டு ஸ்தலங்கள் சக்தி பீடங்களாக அறியப்படுகின்றன.
வணியில் பக்தர்களை காக்கும் சப்தக்ஷ்ருங்கி தேவியின் பீடமானது அரை தேவி பீடமாய் புகழ்பெற்றது. மராட்டியத்தை ஆண்ட போன்ஸ்லே குடும்பத்தின் குலதெய்வமாக துல்ஜா பவானி இருந்ததாக கூறப்படுகிறது. ‘பவானி வாள்’ எனப்படும் ‘வெற்றி வாளை’,’ துல்ஜா பவானி சிவாஜி மஹாராஜாவிற்கு கொடுத்ததாக ஐதீகம். தேவியின் அருளினாலே சிவாஜி மகாராஜ் தன்னுடைய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த முடிந்தது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
அம்மனின் எட்டு திருக்கரங்களிலும் பல்வேறு ஆயுதங்கள் தரித்து வீற்றிருக்கிறாள். வலது திருக்கரம் பற்றிய திரிசூலம் அசுரனின் மார்பைத் துளைத்து உள்ளது. அடுத்தடுத்த கரங்களில் வால், அம்பு, சக்கரம்,சங்கு, வில் ஆகியவை தாங்கி காட்சியளிக்கிறாள். மூன்றாம் திருக்கையில் அசுரனின் வெட்டுண்ட தலையை பிடித்து இருக்க, அம்மனின் வலது பாதம் அசுரனின் உடல் மேல் அழுந்த, இடது பாதத்தை பூமியில் வைத்து, சிம்ம வாகனத்தில் பவானி அம்மன் காட்சி தருகிறாள். கிருத யுகத்தில் கதர்ம முனிவரின் மனைவியான அநுபூதி தன் கணவனை இழந்த போது தானும் உடன் மரணமடைய முயலுகையில் சிறு குழந்தையை தவிக்க விட்டு மரணத்தை தழுவ வேண்டாம் என்றுரைத்த அசுரீரி வார்த்தையை செவிமடுத்தாள்.
தமது குழந்தையை காக்கும்படி பவானி அம்மனை வேண்டி அநுபூதி தலைகீழாக நின்று கடும் தவத்தில் இருந்தாள். அப்பொழுது குகுர் என்னும் அரக்கன் அவளுடைய தவத்தைக் கலைத்து அவளை அவமானப்படுத்த முயன்றான். அநுபூதி தேவியை பிரார்த்திக்க அம்மன் தோன்றி மகிஷமாக மாறிய அந்த அரக்கனை அழித்தாள். அந்த தளத்திலேயே இருந்து பக்தர்களுக்கு அருள் புரியும்படி அநுபூதி வேண்டியதை ஏற்று துல்ஜாபூரிலேயே தன் கோயிலை கொண்டாள் பவானி அம்மன். பல குடும்பங்களுக்கும் குலதெய்வமாக இருந்து காத்துக் கொண்டிருக்கிறாள், பவானி அம்மன்.
என் இல்லத்தில் நவராத்திரியின்போது துல்ஜா பவானி அம்மனை போன்று முகம் வைத்து பூஜை செய்து, பஜனை பாடல்களை பாடி கொண்டாடுகிறோம்,” என்றார்.
“பொதுவாக மராட்டிய மக்கள் தங்கள் இல்லங்களில் ஒன்பது நாட்களும் அகண்ட தீபங்களை, அணையா தீபங்களை ஏற்றி வழிபாடு செய்கின்றனர். பெண்களும், ஆண்களும் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பார்கள்,” என கூடுதல் விபரத்தினை அளித்தார், நாக்பூரில் வசிக்கும் சுனந்தா சாரி.
தெலுங்கானா மாநிலத்தில் மஞ்செரியாலில் வசிக்கும் மராட்டியரான ஆர்த்தி சஞ்சய் தயித் உள்ளூர் மக்களுடன் ‘பதுகம்மா’ ( Bathukamma) விழாவினை கொண்டாடுவதில் மகிழ்ச்சி ஏற்படுவதாக கூறுகிறார்.
“பதுகம்மா விழாவானது தெலங்காணா மக்களின் கலாச்சார உணர்வைப் பிரதிபலிக்கிறது. மருத்துவ குணங்கள் கொண்ட பல்வேறு வகையான மலர்களால் கோபுர வடிவில் ஏழு அடுக்குகளாக அமைக்கப்படுகிறது, ‘பதுக்கம்மா’ . தெலுங்கில், ‘பதுக்கம்மா’ என்பதன் பொருள் ‘அம்மனே வருக’ என்பதாகும். பெண்களின் காவல் தெய்வமான மகா கௌரியை, பதுகம்மா வடிவில் வணங்குகின்றனர். பதுகம்மாவை கோலங்களின் நடுவில் வைத்து சுற்றி ஆடும் போது குஜராத்தின் கர்பாவும், மஹாராஷ்டிராவின் போண்ட்லா ( Bhondla) நடனத்தையும் நினைவூட்டுவதாக உள்ளது,” என்றார்.
இவ்வாறு பல்வேறு மாநிலங்களில் நவராத்திரி கொண்டாடப்படும் விதங்களில் சிலசில மாற்றங்கள் இருந்தாலும் பக்தி என்னும் விஷயத்தில் பலமலர்களைக் கொண்ட ஒரு கதம்ப மாலையில் ஜொலிக்கும் நம் பாரத அன்னையின் புன்னகையே நம் கலாசாரத்திற்கு, நம் பண்பாட்டிற்கு, நம் ஒற்றுமைக்கு ஒரு சான்றாய் விளங்குகிறது.
நம் ஆரோக்கிய வாழ்விற்கு வழிகாட்டி தற்போதைய சூழ்நிலையில் இருந்து உலக மக்களை காத்து முப்பெருந்தேவியரும் அருள் பாலிக்க வேண்டி
‘சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே !
சரண்யே திரியம்பிகே கௌரி நாராயணீ நமோஸ்துதே !!’ – என நாம் அனைவரும் பிரார்த்திக்கும் நேரமிது.