2002… அப்போது நான் மஞ்சரி இதழ் ஆசிரியராக பணியில் இருந்தேன்… தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில், இதழுக்குத் தேவையான டைப் செட் செய்து கொடுக்கும் மாஸ் டைபொகிராஃபிக் அலுவலகம் இருந்தது… நானும் கீழாம்பூர் சாரும் ஒருமுறை அலுவலகத்தை விட்டு வெளியே வந்து என் பைக்கில் ஏறி சற்று நகர்ந்து வந்த போது … அந்தத் தெரு முனையில் இருந்த ஒரு ஒயின் ஷாப் அருகே… ‘அவர்’ எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார்…
திடீரென நிமிர்ந்து பார்த்தார்… பிரெஸ் என எழுதப் பட்டிருந்த பைக்… சற்றே உற்றுப் பார்த்தார்… பின்னே கீழாம்பூர் சார்…
அந்த இடத்திலேயே நிறுத்தி… சிறிது பேச்சுக் கொடுத்தார்… நான் மஞ்சரி இதழ்ப் பொறுப்பு என அறிந்ததும்… அவர் முகத்தில் ஏதோ ஒரு பிரகாசம் தெரிந்ததை நான் உணர்ந்து கொண்டேன்…
வெகு சாதாரணமாக… இயல்பான மனிதரைப்போல் ஒரு கட்டம் போட்ட கைலியும் டீ ஷர்டுமாக நடந்து வந்த அவரைக் கண்டு நான் ஆச்சரியப் பட்டுப் போனேன்… என் நெற்றிக் குறியீடு அவரை என்னவோ செய்திருந்தது… அதையும் நான் புரிந்து கொண்டேன்… வீட்டுக்கு வாங்களேன் என்று அழைத்தார் … இன்னொரு நாள் வருகிறேன் சார் என்று சொல்லிவிட்டு கடந்து வந்தோம்…
பின்னும் சில நாட்கள் நாரதகான சபாவில் வைத்து… சங்கீதாவில் கொறிக்கும் நிலையில்… சில முறைகள் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்பில் வைத்து… பி.எஸ்., பள்ளி வளாக அரங்கின் சில நிகழ்ச்சிகளில்… என்று சிநேகப் புன்னகையுடன் அவரைக் கடந்து வந்தேன்…
எல்லோரும் என்னை ஸ்ரீராம் என்றோ செங்கோட்டை என்றோ அழைத்துக் கொண்டிருந்த போது … அவர் மட்டும் என்னை ஸ்ரீ என்ற ஒற்றைச் சொல்லாலே அழைத்தார்… அவர் அதனைச் சொல்லும் விதம் கூட எனக்கு மிகவும் பிடித்தே இருந்தது … ஒவ்வொரு உரையாடலின் போதும் … ஜேகே என்ற பெயர் மட்டும் அவரால் தவறாமல் மாறாமல் பகிரப் பட்டிருந்தது…
அவர் ஜேகே… ஜேகே என்று சொல்லிக் கொண்டிருந்த போது… எனக்கு அது புதிதாக இருந்ததால்… அதென்ன ஜேகே..?! என்று எனக்குள் நான் கேள்வி எழுப்பியதுண்டு..! இருந்தாலும் அதனை வாய்விட்டுக் கேட்டு விடாமல்…யார் அந்த ஜேகே?! என்பதை… அவர் சொல்லும் சம்பவங்களைப் பொருத்திப் பார்த்து… ஒருவாறு நான் புரிந்து கொண்டேன் … அந்த ஜேகே – ஜெயகாந்தன்… தான்!
மாஸ் டைப்போ கிராபிக்ஸில் இருந்து நேரடியாக எல்டாம்ஸ் சாலைக்கு வராமல், அவர் இருந்த தெரு வழியே சற்று சுற்றிக் கொண்டுதான் ஒவ்வொரு முறையும் வரத் தொடங்கியிருந்தேன். பலமுறை வீட்டுக்கு வெளியே கண்ணில் படுவார். கையை உசரத் தூக்கி ஓர் அழைப்பு கொடுப்பார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பேன்… ஜேகே.,வின் பிரலாபங்களுடன்… நாடகக் கதைகள்… சினிமாக் கதைகளும்… அதிகம் அதில் அவரின் அனுபவங்களும் வெளிப்பட்டிருக்கும்!
ஒரு முறை ஜெயகாந்தன் தஞ்சாவூர் கூட்டத்தில் சமஸ்கிருதம் தொடர்பில் பேசிய பேச்சு… ஊடகங்களில் தமிழர் அமைப்புகள் எனும் பெயரில் சிலரால்… பெரும் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தி இருந்தது .. நானோ… அப்போது ஜெயகாந்தனின் பேச்சை ரசித்தேன்! அதில் அப்படி ஒன்றும் பாதகம் இல்லை என நினைத்தேன்!
வழக்கம்போல் அன்றும் அவரை சந்தித்தேன்… அப்போதுதான் அவர் ஏன் மஞ்சரியின் மீது அவ்வளவு பெரிய மரியாதையை வைத்திருந்தார் என்பது புரிந்தது… அவர் வைத்த அந்த மரியாதை… மஞ்சரி இதழுக்கானது என்பதை விட … அவர் அதிகம் பேசிக்கொண்டிருந்த ஜெயகாந்தனுக்கானது என்பது புரிந்தது …
நான் அவரிடம் கேட்டேன்… ஜேகே பற்றி இப்போது பரபரப்பு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது… மற்ற ஊடகங்கள் ஒரு திசையில் சென்றால்… நான் மாறுபட்டு சிந்திப்பவன்… அதன் எதிர்த்திசையில் பயணிப்பேன்… இப்போது நம் மஞ்சரி இதழில் ஜேகே குறித்து ஏதாவது நேர்மறை விஷயங்களை வெளிப்படுத்தியாக வேண்டும் என்று நினைக்கிறேன்… ஏதாவது ஐடியா கொடுங்களேன் என்றேன்.. !
அவரும் மகிழ்ச்சியுடன்… ஸ்ரீ.. என் வீட்டுக்கு வாயேன்… உனக்கு அருமையான விஷயம் எடுத்துத் தருகிறேன் என்றார்… நானும் அவருடன் அப்படியே வண்டியை தள்ளிக் கொண்டு… நடந்து சென்றேன் !
புத்தகங்கள் நிறைய வைத்திருந்தார்… ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார்…அதனுள் ஒரு சில பேப்பர் ஜெராக்ஸ்ஸும் வைத்திருந்தார்… ஒரு சம்பவத்தை சொல்லத் தொடங்கினார் …
மஞ்சரியின் ஆசிரியராக இருந்த தி.ஜ. ரங்கநாதனும் ஜேகேயும் ஒரே காம்பவுண்டில் குடியிருந்தனர்… ஆனால் அவர்களுக்குள் ஏதோ முகம் பார்த்து ஸ்நேகப் புன்னகையுடன் நலம் விசாரித்து செல்லும் அளவுதான் பழக்கம் இருந்தது…
ஒரு நாள் சரஸ்வதி இதழ் தபாலில் வந்தது அந்த தபாலை வாங்கினார் தி.ஜ.ர., அந்த இதழின் அட்டைப்படத்தில் ஜே கே படம் வந்திருந்தது… அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் திஜர.,
அடடே… நீங்க எழுத்தாளரா..?! எனக்கு தெரியாமல் போயிற்றே..! என்று ஜேகே.,யிடம் அந்த இதழைக்கொடுத்து விட்டு விசாரிக்க… அதன் பின்னரே இருவரும் நெருங்கி பழக தொடங்கியுள்ளனர்… ஜெயகாந்தன் கதைகள் இதழ்களில் அதிகம் வந்தன …
திஜர.,வும் நிறைய எழுதினார் … அவர்களுக்கிடையே இருந்த பழக்கம் அன்னியோன்னியம் ஆனது … அந்த நெருங்கிய பழக்கத்தால் தான் ஜெயகாந்தன் திஜர.,வை தன் உள்ளத்தில்… ஓர் உச்சத்தில் வைத்திருந்தார்…
அது எப்போது தெரியவந்தது தெரியுமா?! ஜெயகாந்தன் தன் சிறுகதைகளை தொகுத்து ஒரு நூல் ஆக்கினார். அதற்கு ‘ஒரு பிடி சோறு’ என்று தலைப்பிட்டார். அந்த நூலுக்கு அணிந்துரை எழுதித் தருமாறு திஜர.,விடம் கேட்டார். அதன்படியே நூல் வந்தது. இது என்ன பெரிய அதிசயம்..?! என்றால்… ஜெயகாந்தன் எத்தனையோ நூல்கள் எழுதியிருக்கிறார்… எந்த நூல்களுக்கும் அவர் மற்றவரிடம் அணிந்துரை கேட்டு அணுகியதில்லை … அந்த ஒரு பிடி சோறு தொகுப்பை தவிர…! ஜெயகாந்தனின் நூலுக்கு அணிந்துரை எழுதிக் கொடுத்த ஒரே நபர், மஞ்சரி இதழாசிரியர் தி ஜ ரங்கநாதன் மட்டுமே …
அவர் சொல்லச் சொல்ல எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. அவரிடமிருந்து அந்த நூலின் அணிந்துரை, முன்னுரைக்கான ஜெராக்ஸ் பிரதியைப் பெற்றுக் கொண்டு வந்தேன்… அந்த விவரங்களுடன் அந்த மாத மஞ்சரி இதழின் அட்டைப்படத்தில் ஜெயகாந்தன் படத்தைப் போட்டு… உள்ளே கட்டுரையாக எழுதியிருந்தேன்….
இதழை அவரிடம் கொடுத்தேன்… ஸ்ரீ… நீ ஒருமுறை ஜேகே.,யை நேரில் பார்த்துவிட்டு வாயேன்… என்றார். போன் நம்பர் வீட்டு முகவரி கொடுத்து போய் வா என்றார்…
அவர் சொன்னதற்காக… அந்த இதழையும் எடுத்துக் கொண்டு… ஜெயகாந்தனின் வீட்டுக்குச் சென்றேன். மாடியில் இருக்கிறார் போய்ப் பாருங்கள் என்று குரல் வந்தது. வலது பக்க இடைவெளி வழியே மாடிக்குச் சென்றேன்…
எங்கள் ஊர்ப் பக்கங்களில் சிறுவயதில் நான் கண்டு பழக்கப் பட்டிருந்த டீக்கடை குடிசை கெட்டப்… அதே போன்று மர பெஞ்சுகள்… நீளமான மர டேபிள்களுடன்…! அங்கங்கே கண்ணாடி டீ க்ளாஸ்கள்… ஓர் ஓரத்தில் தனியே கைலி, பனியனுடன் அமர்ந்திருந்த ஜெயகாந்தன்… சற்று தள்ளியே என்னை அமரச் சொல்லிவிட்டு… பேச்சைத் தொடர்ந்தார்…
மஞ்சரி இதழைக் கொடுத்துவிட்டு… நடந்த விஷயங்களையும் சொல்லிவிட்டு… மஞ்சரிக்காக ஜெயகாந்தன் சார் ஏதாவது புதிதாகத் தர வேண்டும்… திஜர.,வின் மஞ்சரி உறவு தொடரவேண்டும்… என்று வேண்டுகோள் வைத்தேன்…
எனக்கு எழுதிச் சலித்துவிட்டது… இனியும் நான் என்ன எழுதி என்ன சாதிக்கப் போகிறேன்… என் மொழிபெயர்ப்பு விஷயங்கள் ஏற்கெனவே இருக்கே… அதை நீ எடுத்து மஞ்சரியில் போட்டுக்கோ… என்று உரிமையுடன் கூறினார்… அப்போது அவர் ஞானபீடத்தைத் தொட்டிருந்தார்!
மீண்டும் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு… மீண்டும் அவர் வீடு… சொன்னேன். சிரித்தார். நான் கண்ட காட்சிகளின் வர்ணனைகள் அவருக்குள் நகைப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும்!
மீண்டும் அதேபோல்… நாரதகான சபா கச்சேரி, சங்கீதா நொறுக்கல்கள் என முகப் பழக்கம் மட்டும் முடிந்துவிடாமல் தொடர்ந்தது… நான் தினமணி பணியில் சேரும் வரையில்!
அவரை நான் கடைசியாகப் பார்த்து வருடம் பத்து கடந்து விட்டது… இன்றோடு அவரும் தன் கடைசி நாள் இதுவெனச் சொல்லி விடைபெற்றுச் சென்றுவிட்டார்…
எனக்கு திரையுலக நட்புகள் மிகமிகக் குறைவே! விரல் விட்டு எண்ணிவிடலாம்! அந்த நட்புகளில் இலக்கியத் தரம் வாய்ந்த இனிய நட்பாக என்னுள் மலர்ந்தவர் – வெங்கட்ராமன் எனும் பெயர் கொண்டு… ஸ்ரீகாந்த் எனும் பெயர் பூண்டு… தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் கோலோச்சிய ‘அவர்’! அந்த அவருக்கு என் சிரத்தாஞ்சலி!
~ செங்கோட்டை ஸ்ரீராம்