மூன்று வார இடைவெளிக்குப் பின், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டம் இன்று துவங்கியது.ரஷியா-உக்ரைன் போரால் பரபரப்பான சூழல் நிலவுகையில் இந்த தொடர் தொடங்கியுள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.,31ல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் துவங்கியது. பிப்.,1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் கட்ட அமர்வு பிப்.,11ல் முடிந்தது. மூன்று வார இடைவெளிக்குப் பின், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டம் இன்று துவங்கிய நிலையில் கொரோனா பரவல் காரணமாக, முதல் கட்ட கூட்டத் தொடரில், காலையில் ராஜ்யசபாவும், மாலையில் லோக்சபாவும் இயங்கின. தற்போது, வைரஸ் பரவல் குறைந்துள்ளதால், இரு சபைகளையும் ஒரே நேரத்தில் துவங்கியுள்ளன. இந்த 2வது கூட்டம் ஏப்.,8ம் தேதி வரை நடக்க உள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தாமதம் செய்ததாக குற்றச் சாட்டு எழந்தது.
உக்ரைன் விவகாரம், பி.எஃப் வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. துணை மானியக் கோரிக்கை குறித்த அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
