பஞ்சாபில், நாங்கள் உங்களுக்காக உள்ளோம். வேலைவாய்ப்பின்மை, விவசாயம் ஆகியவற்றிற்காக உழைப்போம்.அனைவருக்குமான முதல்வராக இருப்பேன் என பக்வந்த் மான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வராக பதவியேற்று கொண்ட பின்னர், அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சியின் பக்வந்த் மான் பேசியதாவது,
பகத் சிங் சொந்த ஊரில் பதவியேற்பு விழாவிற்கு கூடியவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முன்பு பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகை அல்லது கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும். ஆனால், பகத் சிங்கிற்கு எனது மனதில் சிறப்பான இடம் உள்ளதால், அவரது கிராமத்தில் பதவியேற்பு விழாவை நடத்தினேன்.
இங்கு, நாங்கள் உங்களுக்காக உள்ளோம். வேலைவாய்ப்பின்மை, விவசாயம் ஆகியவற்றிற்காக உழைப்போம். நான், எனக்கு ஓட்டு போடாதவர்கள் உட்பட அனைவருக்குமான முதல்வராக இருப்பேன்.
மொகிலா கிளினிக் மற்றும் அரசு பள்ளிகளை பார்வையிட வெளிநாட்டினர் டில்லி வருவதை நீங்கள் பார்க்கலாம். அதுபோல பஞ்சாபையும் மாற்றுவோம். வரலாற்றில் பொற்காலம் துவங்கி உள்ளது. தியாகிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மூத்த குடி மக்களிடம் வாழ்த்துகளை கேட்கிறோம். ஆதரவு அளித்த பஞ்சாப் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆம் ஆத்மியை துவக்கி பஞ்சாபிற்கு கொண்டு வந்த கெஜ்ரிவாலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு என பேசியுள்ளார்.





