தென்காசி மாவட்டம் சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்மன் உடனாய ஸ்ரீ சிவசைலநாத சாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.



கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 19 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜையுடன் கும்பாபிஷேக ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், 9.30 மணிக்கு வாஸ்துசாந்தி, மாலை 4.30 மணிக்கு மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கடஸ்தாபனம், 6.30 மணிக்கு முதற்கால யாகபூஜைகள், 8.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும்,
செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 11.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, 8.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும்
புதன்கிழமை காலை 9 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, 11 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, 6 மணிக்கு ஐந்தாம் கால யாகபூஜை, இரவு 8 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும் நடைபெற்றது.
ஜூன் 23 வியாழக்கிழமை கும்பாபிஷேகத்தன்று காலை 7.45 மணிக்கு ஆறாம் கால யாகபூஜை, 9 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை கடம்புறப்பாடு 10 மணிக்கு விமானமகா கும்பாபிஷேகம், சிவன் மற்றும் அம்மன் மூலஸ்தான கோபுரக் கலசம் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை பிரசாதம் வழங்குதல் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது. மாலை திருக்கல்யாணம் இரவு சாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கும்பாபிஷேக கமிட்டியினர் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், சிம்சன் குழுமத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள், பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.