ஆந்திரா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் திடீரென பூமிக்கு அடியில் இருந்து புகை வந்து வெப்ப காற்று வீசும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கோண சீமா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் வரலாறு காணாத அளவு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோதாவரி நதி அருகே உள்ள ஐ போல வரம் வி கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோபால் ராஜ். இவரது வீட்டின் அருகில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூமிக்கு அடியிலிருந்து திடீரென புகை வந்தது. இதனைக் கண்ட கிராம மக்கள் ஆச்சரியமடைந்து அந்த பகுதியில் பள்ளம் தோண்டியபோது பள்ளத்திலிருந்து அதிக அளவில் புகை கிளம்பியது.
இதையடுத்து அந்த ஊர் முழுவதும் வெப்பமாக காணப்பட்டது. சிறிது சிறிதாக சுமார் 3 கி. மீ. தூரத்திற்கு பூமியிலிருந்து வந்த புகையின் காரணமாக வெப்ப காற்று வீசியது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆய்வு செய்த பிறகு எதற்காக பூமிக்கு அடியில் இருந்து புகை வந்தது என தெரியவரும். அசம்பாவிதம் ஏதாவது நிகழா வண்ணம் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.
திடீரென பூமிக்கு அடியில் இருந்து புகை வந்து வெப்ப காற்று வீசும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பூமிக்குஅடியில் இருந்து புகை வருகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.