குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்கு வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருந்ததையடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக புணேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை தெரிய வரும் என்றும் பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதன்மை/ சுகாதாரச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனை செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் குரங்கு அம்மை அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாட்டிற்குள் உள்நுழையும் அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்,
மாநிலங்கள், அதற்கான மருத்துவக்குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்கு வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருந்ததால், அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் குறித்து கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்ததாவது,
கேரளத்தில் குரங்கு அம்மை நோய்த் தொற்றுடன் காணப்பட்டவரின் மாதிரிகள் புணேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்குத் திரும்பிய நபருடன் நெருங்கிப் பழகியவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், இவருக்கும் அறிகுறிகள் தெரிய வந்ததையடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கவலைப்படும் வகையில் தற்போது நிலைமை மோசமடையவில்லை. மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

