நாளை இலங்கை புதிய அதிபர் தேர்தல்,அவசர நிலை பிரகடனம் ..

Published:

இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்காக மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதிபர் பதவிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 20ம் தேதி இலங்கை புதிய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் தான் காரணம் எனக் கூறி மக்கள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதால், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இருந்தும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுமாறு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக அவர்கள் அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர்.

போராட்டம் மிகத் தீவிரமடைந்ததால் சிங்கப்பூர் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே, கடந்த சில தினங்களுக்கு முன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அந்தத் தகவலை நாடாளுமன்ற அவைத் தலைவர் அலுவலகம் உறுதிப்படுத்தியது. இதையடுத்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக பதவியேற்றார்.  கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றமும் கோத்தபய ராஜபக்சேயின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது.

இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு, 13 நிமிஷங்கள் மட்டுமே நடைபெற்றது. அந்த அமர்வில், நாட்டில் அதிபர் பதவி காலியானதாக நாடாளுமன்றச் செயலர் தம்மிகா தசநாயக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனிடையே, அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல், வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக நாளை நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. அப்போது அதிபர் பதவிக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

இந்நிலையில் அதிபர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா,  ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள தல்லாஸ் அலகப்பெருமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தல், அத்தியாவசிய பொருள்கள், சேவைகளை பேணும் வகையில் இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்றிரவு அறிவித்தார். இந்த அவசரநிலை பிரகடனத்தின் மூலம் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்புச் சதி
தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று  பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் தலைவர் வசந்த  முதலிகே நேற்று தெரிவித்தார்.

மேலும் இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய கூட்டமைப்பின் தூதர் கலாநிதி தயான் ஜயதிலக கூறுகையில், ‘இலங்கை அதிபர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்கே, அரசியலமைப்புச் சதியில் ஈடுபட்டுள்ளார். அவரது சதியை வீழ்த்த முடியவில்லை என்றால், ராஜபக்சேக்களை ஆட்சியிலிருந்து அகற்றிய போராட்டம் தோல்வியடைந்து விட்டதாகவே கருத வேண்டும். ராஜபக்சேக்களின் சூழ்ச்சிகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்றார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
images 24 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img