
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டு, ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபையில் 66 எம்எல்ஏ.,க்களுடன் அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருக்கின்றனர். இதற்கிடையே கட்சியில் ஏற்பட்ட பிரச்னையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமி, பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். இதனையடுத்து சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியையும் பறிக்க பழனிசாமி திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றுவது தொடர்பாகவும், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய மூவரும் அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாகவும் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சபாநாயகர் அலுவலகத்திற்கு சென்று அப்பாவுவிடம் கடிதம் வழங்கியுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் சட்டசபை துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், சட்டசபை அதிமுக துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

