கேரளா, தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் நகல்களை தர வேண்டும் என்று எர்ணாகுளம் கோர்ட்டில் சரிதா நாயர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தங்கம் கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல், அதிகாரிகள் மீது ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அவர் எர்ணாகுளம் கோர்ட்டில் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக ரகசிய வாக்குமூலம் அளித்தார். வழக்கில் முதல்-மந்திரிக்கு தொடர்பு இருப்பதாக கூறி பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் சூரிய மின்தகடு ஊழல் வழக்கில் சிக்கிய சரிதா நாயர், தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் நகல்களை தர வேண்டும் என்று எர்ணாகுளம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
அந்த வழக்கில் ஸ்வப்னா சுரேசுக்கும், சரிதா நாயருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையும் படியுங்கள்: இந்தியாவில் குரங்கு அம்மை பரிசோதனை கருவிகளை தயாரிக்கும் பணி தீவிரம் இதையடுத்து ரகசிய வாக்குமூலத்தில் தன்னை குறித்தும் சில கருத்துகளை ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டு இருக்கக்கூடும் என்று கருதிய சரிதா நாயர் மீண்டும் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு தனி அமர்வு நீதிபதி ஷாஜி பி.சாலி விசாரித்தார். தங்கம் கடத்தல் வழக்கில் ரகசிய வாக்குமூலத்தின் நகலை பெற சரிதா நாயருக்கு என்ன தேவை, அவசியம் உள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத அவர் எப்படி, இந்த வாக்குமூலத்தை கோர முடியும் என்று கேட்டார். பின்னர் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
