நெற்கட்டான்செவல் மாமன்னர் பூலித்தேவரின் 255 வது ஜோதித் திருநாள் குருபூஜை சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரநயினார் கோயிலில் உள்ள பூலித்தேவரின் அறையில் அனுசரிக்கப்பட்டது. பூலித்தேவர் வாரிசுதாரர்கள் அறக்கட்டளையின் சார்பில் துரை சூரியபாண்டியன் ஏற்பாட்டில் இந்த சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த நெற்கட்டாஞ்செவல் பகுதியை ஆட்சிசெய்த மாமன்னர் பூலித்தேவர், ஆங்கிலேய காலனி ஆதிக்கத்துக்கு எதிராக 1750களில் முதல் குரல் கொடுத்தவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி – நவாப் கூட்டுப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றிகளைப் பெற்றவர். நெற்கட்டாஞ்செவல் பகுதியைச் சுற்றியுள்ள பாளையக்காரர்கள் ஜமீன்களைச் சேர்த்துக் கொண்டு, கூட்டுப் படையினை அமைத்தவர்.
1767இல் தலைவன் கோட்டையில் தங்கியிருந்த போது, துரோகியரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, பிரிட்டிஷாரால் சங்கிலியிட்டுக் கொண்டு வந்த போது, சங்கரன்கோவில் கோமதி அம்மனை தரிசிக்க வேண்டும் என்று சொல்லி ஆலயத்துக்குள் வந்த பூலித்தேவர் இங்கே இறைவனுடன் ஜோதியில் ஐக்கியம் ஆனதாக வரலாறு. இதை நினைவுறுத்தும் வகையில் சங்கரன்கோவில் சிவன் அம்பாள் சந்நிதிக்கு நடுவே பூலித்தேவர் அறை உள்ளது. அதில் அவரது திரு உருவப்படமும் இடம்பெற்றுள்ளது. இங்கே சிறப்பு பூஜைகளும் அவரது குருபூஜை தினங்களில் நடைபெறுகின்றன.
1767இல் இறைவனுடன் ஜோதியில் ஐக்கியமான பூலித்தேவரின் 255 ஆவது ஜோதித் திருநாள் குருபூஜை ஆடி மாதம் 10ஆம் நாள் (ஜூலை 26) அன்று அனுசரிக்கப் பட்டது.
பூலித்தேவரின் ஆத்மார்த்த குருவான ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக ஸ்வாமி ஜீவசமாதியில் இருந்து மரியாதைகள் செய்யப்பட்டு, அவரது அருளாசி பெறப்பட்ட மாலை, ஜமீன் சார்பில் வாரிசுதாரர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சங்கரன்கோயில் ஸ்ரீசங்கரநாராயணர் திருக்கோயிலில் உள்ள மாமன்னர் பூலித்தேவரின் அறையில் உள்ள அவரது திருவுருவப் படத்துக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.