
விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை இன்று கொச்சியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படைக்கு புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த புதிய போர்க்கப்பல் தற்போதுள்ள கப்பல்களை விட 7 மடங்கு பெரியதாகும். இந்திய கடற்படைக்கு விமானந்தாங்கி போர்க்கப்பல் கட்டுவதற்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது. இதன் தொடர்ச்சியாக 2009 ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த கட்டுமானப்பணிகள் முடித்து கடந்த ஆண்டு முதல் வெள்ளோட்டம் நடந்து வந்தது. 4 கட்டங்களாக நடந்து வந்த சோதனை அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் இன்று முறைப்படி படையில் சேர்க்கப்பட்டது. 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் மற்றும் 59 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கான கட்டுமான செலவு ரூ.19,341 கோடி ஆகும். இந்த கப்பலில் பெண் அதிகாரிகள், பெண் அக்னிவீரர்களுக்கான தனித்தனி அறைகள் உள்பட 2,200 அறைகள் உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள் என 1,700-க்கு மேற்பட்டோர் இந்த கப்பலில் பணியாற்ற உள்ளனர்.
இதன் மூலம் சொந்தமாகக் கப்பல் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.போா்க் கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, கொச்சி கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்ட இந்தக் கப்பல், அதிநவீன தானியங்கி வசதிகளைக் கொண்டுள்ளது. இந்திய கடற்படை வரலாற்றிலேயே உள்நாட்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகும்.
ஐஎன்எஸ் விக்ராந்த்
இந்தக் கப்பலில் நூறுக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கருவிகளும், இயந்திரங்களும் ஏராளமாக பொருத்தப்பட்டுள்ளன.1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகியுள்ள இக்கப்பலிலிருந்து மிக் – 29கே போா் விமானங்கள், கமோவ் – 31 ஹெலிகாப்டா்கள், எம்ஹெச் – 60ஆா் ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும். அதிகபட்சமாக சுமாா் 28 நாட் வேகத்தில் கப்பலை இயக்க முடியும்.
இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி இன்று கொச்சி கடற்படைத் தளத்தில் இக்கப்பலை இந்தியக் கடற்படையில் இணைத்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன், கடற்படையின் முக்கிய தளபதிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.






