திருவோணம்பண்டிகைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது.நாளை முதல் 9ம் தேதி வரை 3 நாட்கள் சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் திருவோண விருந்து வழங்கப்படும்
திருவோணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை இன்று (6ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 10ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் படிபூஜை, உதயஸ்தமன பூஜை, அஷ்டாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை 3 நாட்கள் சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓண விருந்து வழங்கப்படும். 10ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.
அன்றுடன் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நிறைவடையும். சபரிமலை வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். நிலக்கல் பகுதியில் உடனடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.