மேற்பார்வை பணியில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் – ஆலயங்களின் ஆகம விதிகளில் மூக்கை நுழைக்காதீர்கள் – என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
அர்ச்சகர்களின் பயிற்சிக் காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக வருவதை இந்து முன்னணி ஒருபோதும் எதிர்த்தது இல்லை. ஏற்கனவே அனைத்து ஜாதியினரும் தமிழகத்தில் அர்ச்சகர்களாக உள்ள நிலையில் ஏதோ திமுக ஆட்சிக்கு வந்த பின்புதான் புதிதாக அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதாக பாசாங்கு செய்கிறது. இது முழுக்க முழுக்க ஓட்டு வங்கி அரசியலுக்காக செய்யப்படும் தந்திரம்.
அர்ச்சகர் பணி அரும்பணி, அர்ப்பணிப்பான பணி, இறைவன் சன்னதியில் பூஜை புனஸ்காரங்கள் செய்வதற்கு சேவை மனப்பான்மையும், தொண்டுள்ளமும், இறையியல் பற்றிய ஞானமும் தேவை. அதற்கு கடுமையான நியமங்கள், பயிற்சிகள் அவசியம்..
முறையான அர்ச்சகர் பயிற்சி என்பது மந்திர உச்சரிப்பு, நேரம் தவறாமை,, ஆறு கால நித்திய பூஜை முறைகள், வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள், ஆராதனைகள், குடமுழுக்கு என அனைத்திலும் நிபுணத்துவம் பெறுவதோடு இவற்றை அனுசரிக்க மனவலிமை ஆகியவற்றை உள்ளடக்கியது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்
ஆனால் தற்போது அறநிலையத்துறை ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என அர்ச்சகர்கள் பயிற்சிக் காலத்தை 5 ஆண்டிலிருந்து 1 ஆண்டாக குறைத்து இருப்பது பலவித சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
ஏற்கனவே அறநிலையத்துறை வசமுள்ள கோவில்களில் இந்து அல்லாத கிறிஸ்தவர்கள் இந்து பெயரில் ஒளிந்து கொண்டு பணியாளர்களாக உள்ளனர். திமுகவை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பணியமர்த்தப்படுவதாக செய்திகள் வருகிறது
இந்நிலையில், அர்ச்சகர் பயிற்சி காலம் குறைக்கப்பட்டதன் மூலமாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும், திராவிடர் கழகத்தினரையும், திமுகவினரையும், கம்யூனிச வாதிகளையும், கிரிப்டோ கிறிஸ்தவர்களையும் அர்ச்சகர்களாக நியமிக்க நடகின்ற சதி என்றே பக்தர்கள் எண்ணுகின்றனர்.
தமிழகத்தில் ஆன்மீகத்தின், தமிழின் அடையாளமாக விளங்குகின்ற பெருமைக்குரிய பல ஆதீன மடாதிபதிகள் அறநிலையத்துறையின் இந்த அத்துமீறலைக் கண்டித்துள்ளனர். இந்துக்களின் ஆகம விதிகளில் தலையிட வேண்டாம் எனவும், பயிற்சிக் காலத்தை குறைக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.
கோவில்களில் வரவு, செலவு கணக்கு பார்க்க நியமிக்கப்பட்ட அறநிலையத்துறைக்கு அப்படி என்ன அக்கறை? ஆகம விதிகளை சிதைக்கவேண்டும் என்பதற்காகவா?
பாழடைந்த கோவில்கள், குடமுழுக்கு நடைபெறாமல் சிதைந்து போய் உள்ள கோயில்கள் பல ஆயிரம் உள்ளன. கோயில்களில் கூட்ட நெரிசலை சரிப்படுத்திட, பக்தர்கள் மனம் நோகாமல் தரிசித்திட அறநிலையத்துறை வழிவகை செய்ததாக தெரியவில்லை. ஆனால் கோவில் ஆகம விதிகளில் மட்டும் மூக்கை நுழைப்பது ஏதோ உள்நோக்கத்தோடு மட்டுமே இருக்க முடியும் என ஆன்மீகப் பெரியவர்களின் சந்தேகமாக உள்ளது.
தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்று சமத்துவம் சமூக நீதி பேசும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அவரது தலைவரின் வீட்டு பூஜை அறையில் கடைபிடிக்க முடியுமா?
உண்மையிலேயே அனைத்து சாதி அர்ச்சகர்களின் வாழ்வாதாரம் குறித்த அக்கறை அறநிலையத்துறைக்கு இருக்குமானால், பயிற்சி எடுக்கும் அனைத்து அர்ச்சகர்களுக்கும் 5 ஆண்டுக்காலம் உதவித்தொகை கொடுத்து படிக்க வைத்து அவர்களைத் திறம் உள்ளவர்களாக ஆக்கவேண்டும்.
ஆன்மிகமும், ஆகமமும் தொன்று தொட்டு வருகின்ற வழக்கங்கள். வழிபாடு முறைகளில் தலையிடுவது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என்பதை அமைச்சர் சேகர்பாபு அவர்களும், தமிழக அரசும் புரிந்துகொள்ள வேண்டும்.
அறநிலையத்துறை கோவில்களின் ஆகம விதிகளில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.