மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவுற்றது. 23 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்றார் தமிழரசன்.வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் திறம்பட எதிர்கொண்டு அடக்கினர். 9 சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் மொத்தம் 860 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். போட்டி தொடங்குவதற்குமுன் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன்பின்னர் போட்டி தொடங்கியது. முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து 7 கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன்பின்னர் போட்டிக்கான காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் திறம்பட எதிர்கொண்டு அடக்கினர். இதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று கெத்து காட்டிய காளைகளையும் பார்க்க முடிந்தது. சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 9 சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் மொத்தம் 860 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. களத்தில் சோர்வடையாமல் நின்று 23 காளைகளை அடக்கிய சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பெற்றார். அவருக்கு முதலமைச்சர் வழங்கும் கார் பரிசாக அளிக்கப்பட்டது. 19 காளைகளை அடக்கிய பாலமேட்டைச் சேர்ந்த மணி 2ம் இடம் பிடித்தார். 15 காளைகளை அடக்கி பாலமேடு ராஜா மூன்றாம் பரிசை தட்டிச் சென்றார். இதேபோல் சிறந்த காளையாக கருப்பண்ணசாமி கோயில் காளை தேர்வு செய்யப்பட்டது. திண்டுக்கல்லைச் சர்ந்த ரமேஷ் என்பவரின் காளை 2வது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 50 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், மாடுபிடிவீரர்களின் உடல்தகுதியை பரிசோதனை செய்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதித்தனர். கால்நடைத் துறை இணை இயக்குநர் விவேகானந்தன் தலைமையில் குழுவினர், காளைகளை பரிசோதனை செய்து, தகுதி சான்றிதழ் வழங்கினர்.
முதலில் அய்யனார் கோயில், முத்துமாரியம்மன் கோயில் காளைகள் ஜல்லிக்கட்டு திடலில் அவிழ்த்து விடப்பட்டன. கோயில் காளைகள் என்பதால் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முரட்டுக் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. காலை 8 மணிக்கு முதல் சுற்றுக்கு 100 பேர் என மாடுபிடி வீரர்களும் இறக்கி விடப்பட்டனர்
மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர், மதுரை தெற்கு காவல் உதவி ஆணையர் சாய் பிரணீத் ஆகியோர் தலைமையில் 1,300 போலீசார் அவனியாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.