காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன் என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை.
எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன் எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
கவர்னரின் விளக்கத்தை ஏற்பதா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும் என சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்ற வார்த்தையை பேசியது ஏன் என்பது குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- தமிழ்நாடு, தமிழகம் என்ற பிரச்சினை சட்டமன்றத்துக்கு உள்ளே வரவில்லை. சட்டமன்றத்துக்கு வெளியேதான் இந்த பிரச்சினை வந்தது. தமிழகம் என்று பேசிய வார்த்தையை என்ன நோக்கத்தில் சொன்னேன் என்பதற்கு கவர்னர் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
சட்டமன்றத்துக்குள் நடந்த விவகாரத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. கவர்னரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். நான் இந்த விஷயத்தில் கவர்னருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. கவர்னர் பொது வெளியில் இப்படி சர்ச்சையான வார்த்தையை பேச வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைதான். தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்காக தமிழகம் பல உயிர் தியாகங்களை செய்துள்ளது.
சவுந்தர பாண்டியனார் உண்ணாவிரதம் இருந்து தமிழ்நாடு என்ற பெயர்வர உயிரை மாய்த்துக் கொண்டார். அண்ணா நோய் வாய்ப்பட்டு இயலாமல் இருந்த நிலையிலும் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டு விழாவில் கலந்து கொண்டது வரலாறு. எனவே தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதில் தமிழகம் என்று அழைத்தது சரியான வார்த்தையாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் தலைமை பொறுப்பில் இருப்பவர் பொது வெளியில் சர்ச்சையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இன்று (18-ந்தேதி) தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சைக்கு கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பு மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மிகவும் சிறப்பு. வரவேற்கத்தக்க விஷயம். இதேபோல, தமிழ் நாட்டின் நலன் கருதி சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கும் காலம் கடத்தாமல் உடனே ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும். தமிழ்நாட்டின் மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் ரம்மி, நீட் போன்ற முக்கிய மசோதாக்களும் அதில் அடங்கும்.
இவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் தமிழ்நாடு மக்களின் உயிர், பொருள் ஆகியவற்றின் மீது அக்கறையுள்ள, அவர்களின் நலனுக்கு முன்நிற்கும் ஆளுநர் என்ற பெரும் பெயர் பெறுவார். மக்களும் ஆளுநரை வாழ்த்துவார்கள். நல்ல ஆளுநர் என்ற பெயர் பெறுவாரா? காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.