
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 74.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், மாலை ஆறு மணிக்கு நிறைவு பெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையான வாக்களித்தனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 74.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் ஆண்கள்- 82,021 பேர், பெண்கள்- 87,907 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 945 பேர் வாக்களித்து உள்ளனர். மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது என்றும் தேர்தல் அலுவலர் சிவகுமார் தெரிவித்து உள்ளார். மேலும், வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் 138 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி சீல் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணி தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.