- Advertisements -
Home சற்றுமுன் தமிழகத்தில் அமுலுக்கு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ..

தமிழகத்தில் அமுலுக்கு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ..

#image_title
- Advertisements -
images 6

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்தது- மீறி விளையாடினால் ரூ.5 ஆயிரம் அபராதம் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அரசிதழில் இன்று வெளியிடப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் பலர் பணத்தை பறிகொடுத்த நிலையில் தற்கொலைக்கு தள்ளப்படும் நிலை அதிகரித்து வந்தது. இதனால் இந்த சூதாட்டத்துக்கு தடை விதிக்க தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி முதன் முறையாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கூடிய சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க மறுத்து சட்டத்தை ரத்து செய்து விட்டது.

- Advertisements -

இதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக கொண்டு வரும் வகையில் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். இந்த குழு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதி தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.

இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். அதன்பிறகு இதை நிரந்தர சட்டமாக்க 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

ஆனால் கவர்னர் இந்த மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்காமல் முதலில் சில விளக்கங்கள் கேட்டார். அந்த விளக்கங்களுக்கு உரிய பதிலை தமிழக அரசு தெரிவித்த பிறகும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் அதை திருப்பி அனுப்பி வைத்தார்.

இதனால் கடந்த மாதம் 9-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு மார்ச் 23-ந்தேதி சட்டசபையிலும் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மறுநாளே (மார்ச் 24) இந்த மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வளவு நாள் இழுபறிக்கு பிறகு நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அரசிதழில் இன்று வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து இதை மீறி யாரேனும் ரம்மி, போக்கர் விளையாடினால் அவர்களுக்கு தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

- Advertisements -

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 14 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.