காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் ராமானுஜரின் திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் தான் ஸ்ரீ ராமானுஜர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று 1017 ஆம் ஆண்டு பிறந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் சிறப்பம்சம் ஸ்ரீஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் பிரம்மோற்சவமும் ராமானுஜருக்கு அவதார உற்சவம் என்று 10 நாட்கள் உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு ராமானுஜரின் 1006வது அவதார உற்சவம் கடந்த 16 ஆம் தேதி கோலகலமாக துவங்கியது. தங்கப் பல்லக்கு, மங்களகிரி வைபவம், சிம்ம வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் ராமானுஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ராமானுஜர் அவதார உற்சவத்தில் முக்கிய திருவிழாவாக கருதப்படுவது 9 ஆம் நாள் உற்சவமான ராமானுஜரின் திருத்தேர் உற்சவமாகும்.
50 அடி உயரம் கொண்ட இத்திருத்தேரினை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரை தரிசித்தனர்.
ராமானுஜர் அவதார உற்சவத்தை தொடர்ந்து வரும் மே 4 ஆம் தேதி ஸ்ரீஆதகேசவ பெருமாளின் சித்திரை மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.