ஶ்ரீவில்லிபுத்தூரில் பாதுகாப்பு பணிக்கு வந்த முதல் நிலை காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(32). இவர் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் புதன் கிழமை இரவு ஶ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுக் கூட்ட பாதுகாப்பு பணிக்கு விக்னேஷ் வந்திருந்தார். அப்போது இரவு சுமார் 9 மணி அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென விக்னேஷ் மயங்கி விழுந்தார்.
அவரை அருகில் இருந்த காவலர்கள் மீட்டு உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு விக்னேஷ் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த விருதுநகர் மாவட்ட எஸ்.பி சீனிவாசபெருமாள், ஶ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி சபரிநாதன் ஆகியோர் உயிரிழந்த காவலர் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் உயிரிழந்த காவலர் விக்னேஷ்க்கு திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.