
ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று இரவு கருடசேவை நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவில் ஸ்ரீ ஆதி ஜெகநாதர் பெருமாளும், பட்டாபிஷக ராமபிரானும் எழுந்தருளும் இரு கருட சேவை நடைபெறுகின்றது.
வருகிற 4-ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகின்றது. 7-ம் தேதி உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.
ராமாயண வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடைய இத்திருத்தலத்தில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் சேதுக்கரை உள்ளது. ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், சந்தான கிருஷ்ணன் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.