விருதுநகர் மாவட்டத்தில் வத்ராயிருப்பில் திமுகவினரின் பேனருக்கு திமுகவினரே சாணியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வத்திராயிருப்பில் வைக்கப்பட்டிருந்த திமுகவினரின் பிரம்மாண்ட பேனருக்கு திமுகவினரே சாணியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றிய விபரம் வருமாறு
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் என்பவருக்கு திமுகவில் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வத்திராயிருப்பில் திமுகவினர் முத்தாலம்மன் திடல் மைதானத்தில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். அதில் கட்சி நிர்வாகிகள் பலரது படம் இடம்பெற்று இருந்தது.
இந்நிலையில் ஒருவரது படம் மட்டும் பேப்பர் ஓட்டி மறைக்கப்பட்டிருந்தது.
காலை 9.30 மணிக்கு அங்கு வந்த மகளிர் அணி முன்னாள் அமைப்பாளர் கற்பகம் என்பவர், ஒரு நீண்ட கம்பில் துணியைக் கட்டி அதில் சாணியை தடவி ஒன்றிய செயலாளர் முனியாண்டி என்பவரின் படத்தின் மீது தடவிக் கொண்டிருந்தார்.
இதனால் அங்கு கூட்டம் கூடியது. காவல்துறையினருக்கு தகவல் சென்றது.
சாணியை தடவிய அப்பெண் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றார். பின்னர் பிளக்ஸ் பேனர் வைத்தவர்களை தொடர்பு கொண்ட போலீசார் உடனடியாக அந்த பேனரை கழற்ற உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த திமுகவினர் உடனடியாக அந்த பிளக்ஸ் பேனரை அப்புறப் படுத்தினர்.
இச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினரிடையே உள்ள உட்கட்சி பூசல் இதன் மூலம் வெளிப்படையாக தெரிந்தது.