குளிர்சாதன பெட்டியை விட மண்பானையே சிறந்தது என்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைதள பதிவுகள் மூலம் கவனம் ஈர்ப்பவர் ஆனந்த் மஹிந்திரா. ‘குளிர்சாதன பெட்டியை (ஃப்ரிட்ஜ்) விட மண்பானையே சிறந்தது’ என அண்மையில் அவர் ட்வீட் செய்துள்ளார். இந்தியாவில் தற்போது கோடை காலம் நிலவி வருவதை சுட்டிக் காட்டும் வகையில் இந்த ட்வீட் அமைந்துள்ளது.
சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் ஆனந்த் மஹிந்திரா. அவரது சோஷியல் மீடியா ஷேரிங் அனைத்தும் அமளி துமளி ரகங்களாக இருக்கும். கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு வாழ்த்துவது, சமயங்களில் அதனை வடிவமைத்தவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றவை அவரது வழக்கம். அதோடு நின்று விடாமல் கவனம் ஈர்க்கும் வகையிலான பதிவுகளையும் பகிர்வார். அந்த வகையில் இந்த மண்பானை vs குளிர்சாதன பெட்டி ட்வீட் அமைந்துள்ளது.
“வெளிப்படையாகச் சொல்வதென்றால் அழகியல் பார்வை அடிப்படையிலும், வடிவமைப்பு ரீதியாகவும் மண்பானையே மேலானது. நம் பூமி கோளுக்கு ஏற்ற வகையில் நேர்மறையாக உலகம் கவனம் செலுத்தி வரும் சூழலில் பானை நம் வாழ்க்கை முறையில் சிறந்த அக்ஸசரியாக இருக்கும்” என ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் பானை மற்றும் குளிர்சாதன பெட்டியின் விலை, லைஃப்-டைம், மெயின்டன்ஸ் போன்றவை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.