மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ்காந்தி நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு இடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு ராஜீவ் காந்தி உருவம் பொறிக்கப்பட்ட படத்திற்கு அருகே பழங்கள், குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன. சர்வ மத பிராத்தனை, இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ்காந்தி நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதில் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, கே.வி.தங்கபாலு, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை, விஜய்வசந்த் எம்.பி., மாநில எஸ்.சி.எஸ்.டி.துணை தலைவர் ஐயப்பன், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் மற்றும் ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து ராஜீவ் அமைதி ஜோதி எடுத்து செல்லப்பட்டது. இந்த ஜோதி தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக டெல்லி சென்று அடைந்து அங்குள்ள ராஜீவ் காந்தி நினைவு இடத்தில் சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது. ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ரத்ததான முகாம் நடைபெற்றது.