தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் அருண் ஜேட்லி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி. மத்திய பா.ஜ.க. அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: பிரதமர், திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் முழுமையான முதல் நிதி நிலை அறிக்கை நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லி அவர்களால் இன்று நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நிதிப்பற்றாக்குறை 4.36 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்றும்; இந்திய ரூபாயின் மதிப்பு 6.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்றும்; ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 7.4 சதவிகிதமாக இருக்குமென்றும் நிதி அமைச்சர் அறிவித்திருப்பது ஆறுதலைத் தருகிறது. இருந்தாலும், தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்ற மும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பரவலாக பெருத்த ஏமாற்றத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே கடந்த ஆண்டிலும் கூட இந்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு மிக அதிக அளவில் உயருமென்று எதிர்பார்த்து, இறுதியில் வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் அளவுக்கு மட்டுமே, அதாவது இரண்டு இலட்சம் ரூபாய் என்பது இரண்டரை இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அந்த இரண்டரை இலட்சம் ரூபாய் தற்போது மூன்றரை இலட்சம் ரூபாயாகவாவது உயருமென்று நாடு முழுதும் எதிர்பார்க்கப்பட்டது; ஏடுகளும் எழுதின. எனினும் நிதி அமைச்சர் தனது பதிலுரையிலாவது மக்களின் ஏமாற்றத்தை ஓரளவுக்கேனும் போக்கிடும் வகையில் தனது முடிவினை மறு பரிசீலனை செய்து அறிவிப்பார் என்று நம்புகிறேன்; அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். வேளாண் வருவாய்க்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற இயத எட்டு மாதங்களில் இதற்கான அறிகுறி எதுவும் தென்படாத நிலையில், நெருக்கடியில் சிக்குண்டிருக்கும் இந்திய விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட வேண்டுமென்று அனைவரும் எதிர்பார்ப்பது இயல்பான ஒன்று தான். கல்வித் துறையைப் பொறுத்தவரை இந்தி மயமாக்கல், சமஸ்கிருதமயமாக்கல் போன்ற குறுகிய அணுகுமுறைகளைக் கை விட்டு, இந்திய மொழிகள் அனைத்துக்கும் சமமான பங்களிப்பை அனுமதித்து கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசு மேற்கொள்ளுமானால் அனைவரும் அதனை வரவேற்கவே செய்வார்கள். 2020ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு என்பது நல்ல இலட்சியம். இது வெறும் காகித இலட்சியமாக இல்லாமல், நெடுங்காலமாக மத்திய அரசால் எடுத்துரைக்கப்படும் கொள்கை அறிவிப்பாகஇருந்து வருவதால், அதனை இனியாவது நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களை வகுத்து முறையாக நடைமுறைப்படுத்திட வேண்டும். வளர்ச்சிக்கும், முதலீட்டுக்குமான நிதி நிலை அறிக்கை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவின் கதவுகளைத் தாராளமாகத் திறந்து விடும் மனப்பான்மையை ஓர் எல்லைக் கோட்டுக்குள் நிறுத்திக் கொண்டு, ஆரோக்கியமான முதலீட்டுக்கும் அதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் மட்டுமே வழி காண வேண்டும். மின்சாரத்தின் தேவை அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்த நிதி நிலை அறிக்கையில் தலா நான்காயிரம் மெகாவாட் திறன் கொண்ட 5 மின் உற்பத்தித் திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது தேவையை நிறைவு செய்வதாக இல்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் தொழில் மேம்பாட்டிற்காக புதிதாக “முத்ரா” வங்கித் திட்டம், சிறுபான்மைப் பிரிவு இளைஞர்கள் நலனுக்காக “நயிமன்சில்” திட்டம், சுற்றுலா தலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் அளிக்கும் திட்டம், அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்துப் படியை இரட்டிப்பாக உயர்த்துதல், குழந்தைகள் மேம்பாட்டுக்கு 1,500 கோடி ரூபாயில் புதிய திட்டம் போன்றவை வரவேற்கப்பட வேண்டிய திட்டங்களாகும் எனினும், அயதத் திட்டங்கள் எந்த அளவுக்கு ஆக்கப் பூர்வமாக செயல்படுத்தப்படப் போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஐந்து மாநிலங்களில் “எய்ம்ஸ்” மருத்துவ மனை அறிவிக்கப் பட்டிருப்பதில், தமிழ்நாடும் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக் குரிய ஒன்றாகும்.
வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜேட்லிக்கு கருணாநிதி கோரிக்கை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari