சிறு வியாபாரிகளை சீரழிக்கும் லுலு கைபர் மார்க்கெட் குறித்து, வாய் திறக்காத திராவிட மாடல் வியாபாரிகள் சங்கங்கள் என இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள தமிழகத்தின் மான்செஸ்டர் என்று சொல்லக்கூடிய கோவையில் லுலு கைபர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது.
2500 கோடி செலவினத்தில் கடைகளும் 1500 கோடி செலவினத்தில் உணவு சம்பந்தப்பட்ட கடைகளும் திறப்பதற்காக ஏற்கனவே திட்டமிட்டு தற்போது திறந்து உள்ளனர்.
இனிவரும் காலங்களில் கோவையில் உள்ள பெரிய கடைகள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவரும் மொத்தமாக பாதிக்கப்படுவது உறுதி.
மக்களின் ஆசையைத் தூண்டி, அன்னியப் பொருட்களைக் காட்டி பணத்தை சம்பாதிக்கும் சமீபத்திய நூதன விபரீதமான வியாபாரிதான் இந்த லூலூ நிறுவனம்.
துபாயில் கிடைக்கும் அத்தனை பொருட்களும் இங்கு கிடைக்கும் என்கிறார்கள். நம் மக்களுக்கு உள்ளூர் தயாரிப்பு அதன் விளம்பரம் இல்லாத காரணத்தினால் வெளியூர் பொருட்கள் மீது ஆர்வம் அதிகமாக இருப்பதை உணர்ந்து கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது.
மேலும் இதுபோன்று பல நிறுவனங்கள் அமேசான் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் போது பல வியாபார சங்கங்கள் கதறி துடித்தனர்.. வியாபாரிகளை தூண்டினர், நிறுவனங்களை வரவிடாமல் தடுப்பதற்காக போராடுவது போன்று நடித்தனர், தற்போது வாய் மூடி உள்ளார்கள் விக்ரமராஜா வெள்ளையன் போன்ற வியாபாரிகள் சங்கத் தலைவர்கள்.
கார்ப்பரேட்டை அழித்தே தீருவோம் என்று சொன்ன கம்யூனிஸ்ட்டை காணவில்லை. கார்ப்பரேட் சக்திகளை முழுமையாக எதிர்ப்போம் சொன்ன திமுக வாய்மூடி நிற்கிறது. அதற்கு முட்டுக் கொடுக்கும் விடுதலை சிறுத்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
தமிழகத்தில் இடதுசாரி சிந்தனையில் இருக்கக்கூடியவர்கள் தயாநிதி மாறன் கலாநிதிமாறன் அவர்கள் நிறுவனம் லுலு நிறுவனம் இதற்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இவர்கள் அத்தனை பேரும் இன்று வாய் மூடி இருப்பதன் காரணம் என்ன?
இதன் உள்நோக்கம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணம் அதன் மூலமாக வந்த லுலு மார்க்கெட் எல்லாம் காரணமாக இருக்குமோ? என்று பொதுமக்கள் சிந்திக்க துவங்கி விட்டனர்.
வியாபாரிகளை பாதிக்கக்கூடிய இந்த லுலு நிறுவனம் கோவையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் வர உள்ளது. இதற்கு எதிராக வியாபாரிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து இந்த நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும்.
இரட்டை நிலைப்பாட்டில் இருக்கக்கூடிய வியாபார சங்கத் தலைவர்களையும் அரசியல் கட்சியினரையும் தமிழக வியாபாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்று வியாபாரிகளை பாதிக்க கூடிய நிறுவனங்கள் அன்னிய பொருட்களை விளம்பரப்படுத்தி விற்கக்கூடிய நிறுவனங்களை தமிழகத்தில் அனுமதிக்காமல் இருக்க அனைத்து வியாபாரிகளும் ஓரணியில் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று இந்து வியாபாரிகள் நல சங்கம் கேட்டுக்கொள்கிறது.