
தென்காசி அருகே பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது.
பாவூர்சத்திரம் சந்தையில் பக்ரீத் பண்டிகையை யொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பழைய காய்கனி சந்தை வளாகத்தில், வியாழக்கிழமை தோறும் ஆட்டுச் சந்தை நடைபெறும். ஜூன் 29 இல் பக்ரீத் பண்டிகை நடைபெறுவதை யொட்டி வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், திப்பணம்பட்டி,நாட்டார்பட்டி, ஆவுடையானூர், கடையம், கல்லூரணி, ராமச்சந்திரபட்டணம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை விற்பனையானது. ஆடுகளை வாங்குவதற்காக கடையநல்லூர்,மேலப்பாளையம், தென்காசி, கடையம், ரவணசமுத்திரம்,பொட்டல்புதூர்,வீராணம், புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் கேரளத்தில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் , பொதுமக்கள் குவிந்திருந்தனர்.
சுமார் ரூ. ஒரு கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.