பிரதமர் மோடி தமிழகம் வருகின்ற நிலையில் ரயில் பயணிகள் பலரின் ஏகோபித்த கோரிக்கையான பயணிகள் ரயில் பழைய கட்டணம் மீண்டும் திரும்பி உள்ளது என்று தெரிகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் அல்லாது குறைந்த தூரத்தில் இயங்கும் பயணிகள் ரயில்களுக்கு முந்தைய பயணிகள் ரயில்களுக்கான கட்டணத்தையே வசூலிக்க சொல்லி வாய்மொழி உத்தரவாக வந்திருப்பதாக ரயில்வே அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலால் பயணிகள் கட்டணத்தில் இயங்கிய ரயில்கள் சிறப்பு கட்டணம் சிறப்பு ரயில் என மாற்றப்பட்டு இதில் விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதை, இன்று முதல் தென்னக ரயில்வே மாற்றி மீண்டும் பழைய பயணிகள் கட்டணத்தை வசூலிக்க வாய்மொழி உத்தரவு ரயில்வே நிலையங்களுக்கு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
பல பயணிகள் ரயிலை விரைவு ரயிலாக மாற்றி அறிவித்த ரயில்களையும் மீண்டும் பயணிகள் ரயிலாக மாற்றி இந்த ரயில்களிலும் பழையபடி குறைந்த பயணிகள் கட்டணத்தை வசூலிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி, பெரும் தாண்டவம் ஆடியது. இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது இதனால் அப்போது ரயில் போக்குவரத்து சில மாதங்களாக முற்றிலும் நிறுத்தப்பட்டது.
பின்பு முக்கிய வழித்தடங்களில் ஒரு சில ரயில்கள் மட்டும் அவசர நிமித்தமாக செல்வோர் வசதிக்காக சிறப்பு கட்டணம் சிறப்பு விரைவு ரயில்களாக இயக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கேரளத்தில் தென்னக ரயில்வே சார்பில் இயக்கப்பட்ட 324 பயணிகள் ரயிலில் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் என மாற்றி அமைத்து எக்ஸ்பிரஸ் கட்டணங்கள், அதாவது இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக முக்கிய வழித்தடமாக மதுரை ராஜபாளையம் செங்கோட்டை, செங்கோட்டை திருநெல்வேலி, திருச்செந்தூர் திருநெல்வேலி, நாகர்கோவில் திருநெல்வேலி, இடையே இயங்கிய பயணிகள் ரயில் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டு எக்ஸ்பிரஸ் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது.
மதுரை திருவனந்தபுரம் திருச்சி சேலம் பாலக்காடு எர்ணாகுளம் ரயில்வே தோட்டங்களில் இயங்கிய அனைத்தும் அதாவது 324 ரயில்களும் சிறப்பு கட்டண ரயில்களாக மாற்றப்பட்டு எக்ஸ்பிரஸ் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது. இதற்கு ரயில் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது .
கொரோனா முடிந்து சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் எல்லாம் சிறப்பு கட்டணத்திலிருந்து பழையபடி விரைவு ரயில் கட்டணமே வசூலிக்கப்பட்டது. ஆனால் பயணிகள் ரயிலில் மட்டும் விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. குறிப்பாக 20 ரூபாய் கட்டணம் சிறப்பு ரயில்களில் 40 ரூபாய் அல்லது 45 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்பட்டது. இதனால் சாதாரண பயணிகள் ரயிலில் ஏறி முக்கிய பணிகளுக்கு வியாபாரம் நிமித்தமாக செல்வதற்கு பெரும் அவதிப்பட்டனர்.
தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த சிறப்பு கட்டணம் ரயில்கள் அனைத்தும் தென்மேற்கு ரயில்வே உட்பட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில் பிரிவுகள் மாற்றி மீண்டும் பயணிகள் ரயில் கடந்த சில தினங்களாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் தென்னக ரயில்வேயில் ரயில் எண் ஜீரோவில் தொடங்கும் ரயில்கள் (train numbers begins with ‘0’ ) குறிப்பாக 200 கி.மீ.,ம்க்கும் குறைவான தொலைவுக்கு ஓடும் ரயில்கள், சிறப்பு கட்டண சிறப்பு முறையில் என இருந்ததை ரத்து செய்து பழைய கோவிட்டுக்கு முன்பு வசூலிக்கப்பட்ட குறைந்த கட்டணமான பயணிகள் ரயில் கட்டணம் ரூபாய் 10 முதல் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல் கிடைத்துள்ளது. இதனால் பயணிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பயணிகள் பலர் தெரிவித்த போது, தென்னக ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயிலை விரைவு ரயில்களாக அதிகாரபூர்வமாக மாற்றிவிட்டது . குறிப்பாக கோயமுத்தூர் நாகர்கோயில் இடையே இயங்கிய பயணிகள் ரயில் ஏழை எளியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதுபோல் மதுரை – புனலூர் – மதுரை இடையே இயங்கிய பயணிகள் ரயில் பயணிகளுக்கு பெரும் பாக்கியமாக இருந்தது. இந்த ரயில்கள் எல்லாம் படிப்படியாக விரைவு ரயில் ஆக மாற்றப்பட்டுவிட்டது
மேலும் முக்கிய வழித்தடங்களில் இரு அல்லது மூன்று பயணிகள் ரயிலை ஒரே ரயிலாக இணைத்து சிறப்பு ரயில் என இருந்ததை மாற்றி விரைவு ரயில் ஆக அதிகாரப்பூர்வமாக மாற்றி இயக்கப்பட்டு வருகிறது.
செங்கோட்டையில் இருந்து மதுரை வரை இயங்கிய பயணிகள் ரயிலும் திண்டுக்கல்லில் இருந்து மயிலாடுதுறை வரை இயங்கிய பயணிகள் ரயிலும் ஒன்றாக்கி மயிலாடுதுறை செங்கோட்டை என ஒரே ரயிலாக மாற்றி கடந்த இரு ஆண்டுகளாக விரிவுரைகளாக இயங்கி வருகிறது.
இது போல் மதுரை செங்கோட்டை, செங்கோட்டை கொல்லம், புனலூர் குருவாயூர் ஆகிய மூன்று பயணிகள் ரயிலை ஒன்றிணைத்து மதுரை குருவாயூர் என ஒரே ரயிலாக விரைவு ரயில் கட்டணத்தில் இயக்கி வருகின்றனர் .
இது போன்ற ரயில்களையும் மீண்டும் பழையபடி பயணிகள் ரயில் கட்டணத்தில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது சென்னை கோட்டத்தில் பயணிகள் ரயில் கட்டணம் மீண்டும் பழைய சாதாரண கட்டண நிலையில் வசூலிக்கப்படுகிறது. ஆனால் திருச்சி மதுரை தோட்டங்களில் சில அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு பழைய சாதரண கட்டண நிலையிலேயே இன்று முதல் பயணிகள் ரயில்களுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது. எனினும் இன்னும் பெரும்பாலான ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை பெற்றதாக தெரிகிறது. இதுபோன்று வாய்மொழி உத்தரவு பெற்று கட்டணம் பழையபடி குறைக்கப்பட்டு வாங்கினால் யூ டி எஸ் ஆப் மூலம் பெறுபவர்களுக்கும் டிக்கெட் ஏஜெண்டுகளுக்கும் சிக்கல் ஏற்படும் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும் படிப்படியாக ஓரிரு நாட்களில் சீராகி, முழு நிலவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிகிறது!