
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், ஒரு விழாவில் பேசும்போது, சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார். அவரது சனாதன ஒழிப்புப் பேச்சு, தேசிய அளவில் எதிரொலித்து, பெரும் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு இடங்களில் உதயநிதிக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன.
பிரதமர் மோடி உள்பட, பாஜக., அமைச்சர்கள், தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஆன்மிகத் தலைவர்கள், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததுடன், திமுக., ஆளும் கட்சியாக் உள்ள தமிழகம் தவிர பல மாநிலங்களில் சட்டப்படியிலான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபகள், “நீங்கள் அரசியலமைப்பின் 19(1)(ஏ)- பிரிவின் கீழ் உங்களது கருத்து உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். அரசியலமைப்பு 25-வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கும் உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். தற்போது உங்களுக்கு உள்ள உரிமையின்படி மேல்முறையீட்டிற்கு வந்துள்ளீர்கள். நீங்கள் பேசியதின் விளைவுகள் உங்களுக்கு தெரியாதா?. நீங்கள் ஒன்றும் சாமானியர் கிடையாது, நீங்கள் அமைச்சர். விளைவுகளை அறிந்து கொள்ள வேண்டும்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதை அடுத்து, இது தொடர்பான விசாரணையை மார்ச் 15- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.