ஏர்செல்லை அடுத்து ஏர்டெல்… கால் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு!

சற்றுமுன் தமிழகம் தொழில்நுட்பம் புகார் பெட்டி

idea airtel vodafone jio - 2026

ஏர்செல்லைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்களும் தங்கள் மொபைல் எண்ணில் இருந்து கால் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஜியோவின் வரவால் அண்மையில் தாக்குப்பிடிக்க முடியாமல் தளர்ந்து போனது, செல்பேசித் துறையில் துவக்கத்தில் கோலோச்சிய ஏர்செல் நிறுவனம். அந்நிறுவனத்தால் பல இடங்களில் சிக்னல் டவர்களுக்கு வாடகை கொடுக்கக் கூட இயலாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகமானதால், தாங்கள் திவால் ஆனதாக அறிவிக்கக் கோரியது ஏர்செல்.

இந்நிலையில், செல்பேசி சந்தையில் ஓரளவு தாக்குப் பிடித்துவரும் ஏர்டெல்லும் தற்போது சிக்னல் பிரச்னையில் மாட்டிக் கொண்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜியோ கால் அழைப்புகள் சேவையிலும் பிரச்னை ஏற்பட்டது. அது போல் இன்று திடீரென்று பல இடங்களில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள், மற்ற தொலைபேசி எண்களுக்கு அழைப்புகளைச் செய்ய இயலாமல் தவித்தனர்.

இதனிடையே, இன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏர்செல் அலுவலகத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏர்செல் நிறுவனம் திவால் ஆனதால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்ற தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களின் சேவைக்கு மாறி வருகின்றனர். அவ்வாறு வேறு நிறுவனங்களுக்கு மாற MNP எனப்படும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி எண்ணை பழைய தொலைத்தொடர்பு நிறுவனம் வழங்க வேண்டும். ஆனால், ஏர்செல் நிறுவனத்தின் சேவை முற்றிலும் முடங்கியதால், MNP எண்ணைப் பெற பத்து நாட்களுக்கு மேலாகியும் பெற இயலாமல் அவதியடைந்து வருவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், எம்.என்.பி., கேட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏர்செல் அலுவகத்தில் ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அப்போது, சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஏர்செல் நிர்வாகத்தினர் கூறியதால், வாடிக்கையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.