சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

Published:

1001379238 - 2026

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம்.சுந்தரேஷ், அஹ்சானுத்தீன் அமனுல்லா, அரவிந்த் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், பிரசன்னா பி. வரலே, ஆர். மகாதேவன் மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அமர்வில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய அமர்வில் சபரிமலை உட்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாகுபாடுகள் மற்றும் அரசியலமைப்பின் கீழ் மத சுதந்திரத்தின் வரம்புகள் குறித்து விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த விவாதத்தின்போது நீதிபதி பி.வி. நாகரத்னா,“தென்னிந்தியாவில் ஒரு கோவில் சைவம், வைணவம் அல்லது ஸ்ரீ வைணவ வழிபாட்டு முறையைப் பின்பற்றினால், அந்த நடைமுறைகளின் அடிப்படையில் அது ஒரு ‘மத உட்பிரிவு’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு சைவ வழிபாட்டு முறையில், வைணவ முறைப்படிதான் வழிபாடு நடக்க வேண்டும் என்று வைணவர்கள் கோர முடியாது. அந்தந்த வழிபாட்டு முறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. இதற்காக ஒரு தனி அமைப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு இந்து எந்தக் கோவிலுக்கும் செல்லலாம்.” என்று விளக்கினார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

அப்போது மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் முத்துராஜ், “எனது வழிபாட்டு முறையை ஒட்டுமொத்த இந்து மத நடைமுறையாகக் கருதிச் சோதிக்க வேண்டாம்” என்று வாதிட்டபோது, நீதிபதி அஹ்சானுத்தீன் அமனுல்லா குறுக்கிட்டு, “நீங்கள் உங்களை ஒரு இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், இந்துக்களுக்கான தனிநபர் சட்டங்கள் மற்றும் திருமணச் சட்டங்களால் நீங்கள் நிர்வகிக்கப்பட்டால், தானாகவே நீங்கள் இந்து மதப் பிரிவின் கீழ் வருகிறீர்கள். அப்போது வழிபாடு என்பது மதத்தின் ஒரு அங்கமாகிறது,” என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், “இந்து மதம் என்பது கடவுள் நம்பிக்கை மற்றும் நாத்திகம் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு ஊசல் போன்றது,” என்று வாதிட்டார். அதற்கு நீதிபதி நாகரத்னா, “நீங்கள் இதை இந்து மதப் பார்வையில் மட்டுமே பார்க்கிறீர்கள். ஆனால், நாங்கள் இந்து அல்லாத பிற மத உட்பிரிவுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் ஆய்கிறோம். அடிப்படை உரிமைகள் என்பது ஒரு இயல்பான மனிதனுக்கானது, சட்டப்பூர்வமான நபருக்கானது அல்ல. இப்போது சிலைக்கு மனசாட்சி இருப்பதாகச் சொல்கிறார்கள். சிலைக்கு மனசாட்சி இருக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இந்த வழக்கில் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள 7 கேள்விகள்:

சட்டப்பிரிவு 25-ன் கீழ் மத சுதந்திரத்தின் வரம்பு என்ன?

தனிநபர் மத உரிமை (பிரிவு 25) மற்றும் மத உட்பிரிவுகளின் உரிமை (பிரிவு 26) ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு என்ன?மத உட்பிரிவுகளின் உரிமைகள், மற்ற அடிப்படை உரிமைகளுக்குக் கட்டுப்பட்டவையா?அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ‘ஒழுக்கம்’ (Morality) என்பது எதைக் குறிக்கிறது?

மத நடைமுறைகளில் நீதிமன்றம் எந்த அளவுக்குத் தலையிட முடியும் (Judicial Review)?சட்டப்பிரிவு 25(2)(b)-ல் உள்ள “இந்துக்களின் பிரிவுகள்” என்பதன் பொருள் என்ன?

ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சாராத ஒருவர், அந்த மதத்தின் நடைமுறைகளை எதிர்த்து பொதுநல வழக்கு (PIL) தொடர முடியுமா?இந்தக் கேள்விகளுக்கான வாதபிரதிவாதங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img