சென்னை ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள் செயலாளர் ஆசிர்வாதம் ஆச்சாரியை அக்கட்சி களம் இறக்கலாம் என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் பார்த்தீபன், மாநில துணைத் தலைவர் சுப்பிரமணி, பா.ஜ.க அரசியல் வியூகக் குழு உறுப்பினரான ஆசிர்வாதம் ஆச்சாரி ஆகியோரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இவர்களில் ஒருவர் தேர்தலில் களம் இறக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆசிர்வாதம் ஆச்சாரி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர். இவர் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு ஆகியோருக்கு எதிரான முக்கிய அரசுத் தரப்பு சாட்சியாகவும்
சேர்க்கப்பட்டுள்ளார். திருச்சியைச் சேர்ந்த இவர், சுப்பிரமணிய சாமியின் வழிகாட்டலில் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம் வகுக்கும் குழு உறுப்பினராக உள்ளார். இவரை வேட்பாளராக அறிவிக்கச் செய்ய சுப்பிரமணியன் சுவாமி முயற்சி செய்து வருகிறார். ஆனால் ஆசிர்வாதம் ஆச்சாரியை களம் இறக்குவதில் தமிழக பாரதிய ஜனதா தலைவர்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே பாஜக.,வில் அண்மையில் இணைந்த நடிகர் நெப்போலியனை களம் இறக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவருக்கு வாய்ப்பளித்தால்,. அவரைப் போன்ற மனநிலையில் உள்ள வேற்றுக் கட்சியினரை பாஜக பக்கம் வர வைக்கலாம் என்று சிலர் அழுத்தம் கொடுத்துள்ளனர். இருப்பினும் முடிவு அமித் ஷாவின் கையில் இருப்பதால், பாஜக தரப்பில் விவாதம் சூடாகியுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் ஆசீர்வாதமா? நெப்போலியனா? : பாஜக தீவிர ஆலோசனை
Published:

