தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் உள்பட 3 பேர் கைது

சற்றுமுன்

Maran-brothers சன் டிவிக்கு முறைகேடாக நவீன தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த கெளதமன், சன் டி.வி. ஊழியர்கள் என மூன்று பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சன் டிவிக்கு முறைகேடாக நவீன தொலைபேசி இணைப்பு வழங்கிய வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள். சன் டிவியின் உயர் பதவிகளில் இருந்தவர்களிடமும் சிபிஐ விசாரித்து வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த வி. கெளதமனை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் புதன்கிழமை இரவு கைது செய்தனர். அவருடன் சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ். கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ். ரவி ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.  அவர்கள் மூவரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்படுவர். இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் தயாநிதி மாறன், பிஸ்.எஸ்.என்.எல். முன்னாள் முதன்மைப் பொது மேலாளர் கே. பிரம்மநாதன் உள்ளிட்டோர் பெயர்களை சிபிஐ சேர்த்திருந்தது. சுமார் 323 சக்தி வாய்ந்த பி.எஸ்.என்.எல். இணைப்புகள் சென்னை போட் கிளப் பகுதியில் உள்ள தயாநிதி மாறன் வீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.பின்னர், இந்த இணைப்புகள் சன் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்டன. இந்த இணைப்புகள் சாதாரண இணைப்புகள் இல்லை. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தேவையான சக்தி வாய்ந்த இணைப்புகள் ஆகும். இந்த இணைப்புகளை முறைப்படி பெற வேண்டுமானால் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.  இதனால், முறைகேடாக இந்த இணைப்புகள் சன் தொலைக்காட்சிக்கு பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.