சென்னை: தொழில் பயிற்சி பெறும் பட்டதாரிகளுக்கு ஊக்கத் தொகை 40% அதிகரித்துள்ளது. இதன்படி தொழில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.4,984 அளிக்கப்படும் என்று தொழில் பயிற்சி வாரிய இயக்குநர் ஏ. ஐய்யாகண்ணு தெரிவித்துள்ளார். இந்த வாரியத்தின் இணைய ஆட்சி முறை முயற்சிகள் பற்றி செய்தியாளர்களிடம் இதனை கூறினார். இதேபோல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பட்டையப் படிப்பு முடித்தவர்களுக்கும் ரூ.3,542 ஊக்கத் தொகையாக அளிக்கப்படும். பட்டைய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2,890, பணிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ரூ.2,758 வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கான ஆணையை மத்திய அரசு கடந்த 23ம் தேதி வெளியிட்டுள்ளது. மாதம்தோறும் அளிக்கப்படும் ஊக்கத் தொகையில் 50 சதவீதத்தை மத்திய அரசு தொழில் பயிற்சி வாரியம் வழியாக தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கும். கடந்த நிதி ஆண்டில் தொழில் நிறுவனங்களுக்கு இந்த வாரியம் ரூ.33 கோடி அளித்துள்ளது. இந்த நிதி ஆண்டில் ரூ.50 கோடி அளிக்கும். நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில் தென் மண்டல தொழில் பயிற்சி வாரியம் 5 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக இந்த வாரியத்தின் இயக்குநர் தெரிவித்தார்.

