சென்னை: உச்ச நீதிமன்றம் இன்று மத்திய அரசுக்கு மே 3ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து திட்ட வரைவு ஒன்றை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்றம் ஏமாற்றுவதாகவும் மத்திய அரசு வஞ்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக., செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்திருப்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது என்று கூறினார். மேலும், மத்திய அரசு தமிழர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது என்று கூறினார்.
நம்பிக்கை இழந்த மக்கள் உச்ச நீதிமன்றத்தை நம்பி உள்ளனர். மத்திய அரசு போட்டுள்ள வழக்கை திரும்பப் பெற்று, ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அறிவித்த படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
மத்திய, தமிழக அரசுகள் மக்களை வஞ்சித்து வருவதையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெரிவிக்கிறது. தற்போது நடைபெற்று வரும் காவிரி மீட்பு பயணம் நிறைவு பெற்றதும், அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்… என்று கூறினார்.