பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை

Published:

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடில் டி.எஸ்.பி.யாகப் பணியாற்றி வந்த விஷ்ணுப்பிரியா (வயது 27) நேற்று திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது ஊடகத்தினரிடையேயும் மக்களிடையேயும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு பிரியாவின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் கோண்டூர். திருமணம் ஆகாத இவர் 2.8.2013 முதல் 1.8.2014 வரை சென்னையில் தமிழ்நாடு போலீஸ் பிரிவில் பயிற்சி பெற்றார். 2.2.2015 முதல் திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார்.

திருச்செங்கோடில் ஆசிரியரை தாக்கிய போக்குவரத்து போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று காலை ஆசிரியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த விஷ்ணு பிரியா ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

பிற்பகல் 3 மணி வரை விஷ்ணுபிரியா, திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் போலீஸ் குடியிருப்பில் உள்ள அவருடைய அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு கீழ்த் தளத்தில் வீடும், மேல் தளத்தில் அவருடைய அலுவலகமும் செயல்பட்டு வந்தது. அலுவலகத்துக்க்ச் சென்ற துணை விஷ்ணு பிரியா சிறிதுநேரத்தில் கீழ் தளத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றார். மாலை 5 மணியளவில் வீட்டு வேலைக்காரப் பெண் பார்வதி வீட்டுக்கு வந்தார். அவர் விஷ்ணு பிரியாவின் படுக்கை அறை கதவைத் தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பார்வதி, ஜன்னல் வழியாகப் பார்த்தபோது உள்ளே விஷ்ணுபிரியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அலுவலகத்திற்குச் சென்று அங்கு இருந்தவர்களிடம் இதுபற்றி கூறினார். உடனடியாக மாவட்ட எஸ்.பி. செந்தில்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் விரைந்து வந்தார். எஸ்பி செந்தில்குமாரும், திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளர் குணசேகரனும் விஷ்ணுபிரியா அறையினுள் சென்று விசாரணை நடத்தினர். அறைக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 10 பக்கத்துக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் தனது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்று எழுதி இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் கடிதம் குறித்த தகவல்களை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

சேலம் சரக டி.ஐ.ஜி. வித்யா ஜெயந்த் குல்கர்னியும் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். விஷ்ணு பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? சொந்த பிரச்னை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் விஷ்ணு பிரியா விசாரணை நடத்தி வந்தார். இந்தக் கொலை வழக்கில் 15-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கியக் குற்றவாளியான யுவராஜ் இதுவரை போலீஸ் பிடியில் சிக்கவில்லை.

தலைமறைவாக உள்ள யுவராஜ் அவ்வப்போது ‘வாட்ஸ் அப்’பில் தனது உரையாடலை பதிவு செய்து வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றில், போலீசாரால் தன்னை பிடிக்க முடியாது என சவால் விடுவதும் இருந்தது. அதனால், உயர் போலீஸ் அதிகாரிகள் யுவராஜைக் கண்டுபிடித்து கைது செய்ய நிர்ப்பந்தம் செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

அதன் காரணமாக விஷ்ணு பிரியா தற்கொலை செய்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. அவரது தற்கொலை போலீஸ் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img