அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர வைகோ கூட்டணியில் இருந்து விலகிய மனிதநேய மக்கள் கட்சி

Published:

 

ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய 6 கட்சிகளும் ஒருங்கிணைந்து ‘‘மக்கள் நல கூட்டணி’’யை உருவாக்கின.

இந்த கூட்டணி அ.தி. மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து சில கூட்டங்களிலும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மக்கள் நல கூட்டணியை தேர்தல் கூட்டணியாக மாற்ற தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் குற்றம் சாட்டினார். அதோடு அவர் மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன் பிறகு அந்த கூட்டணி, 5 கட்சி கூட்டணி என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மனிதநேய மக்கள் கட்சியும் அந்த கூட்டணியில் இருந்து விலகியது. இதனால் 5 கட்சி கூட்டணி உடைந்தது.

இதுபற்றி மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், “மக்கள் பிரச்சனைக்காக ஒன்று சேர்ந்து போராடவே நாங்கள் கை கோர்த்தோம். மற்றபடி அது அரசியல் கூட்டணி அல்ல” என்றார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இதையடுத்து மனித நேய மக்கள் கட்சி 2016 சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் எழுந்தது. 2011–ம் ஆண்டு தேர்தலில் அ.தி.முக.வுடன் சேர்ந்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற்றது.

ஆனால் 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சிக்கு தோல்வியே கிடைத்தது. இதனால் மீண்டும் தி.மு.க. வுடன் கூட்டணி சேரப்போவதில்லை என்று அந்த கட்சி முடிவு செய்தது.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஜவாஹிருல்லா, “2014 பாராளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தொண்டர்களுடன் கீழ்மட்ட தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து செயல்பட வில்லை. எனவே மீண்டும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை” என்றார்.

இந்த நிலையில், சமீப காலமாக மனித நேய மக்கள் கட்சியின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கியுள்ளன. வைகோ, திருமாவளவன் கூட்டணியில் சேர்ந்தால் ஓட்டுக்களை பிரிக்கத்தான் முடியுமே தவிர, வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ள ஜவாஹிருல்லா, தி.மு.க.வுடன் 2016 தேர்தலில் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

இந்த நிலையில் அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை பாராட்டி பேசத்தொடங்கியுள்ளார். சென்னையில் நடந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்து இருப்பதற்காக அவர் ஜெயலலிதாவை மிகவும் புகழ்ந்து பேசினார். சட்டமன்றத்தில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது ஜவாஹிருல்லா அதற்கு ஆதரவு தெரிவித்தார்.

இது தவிர சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை பாராட்டியும் ஜவாஹிருல்லா பேசினார். இதன் மூலம் அ.தி.மு.க.வுடன் மீண்டும் மனித நேய மக்கள் கட்சி நெருங்கியுள்ளது.

எனவே 2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் மனித நேய மக்கள் கட்சி கூட்டணி அமைக்கும் என்று பேசப்படுகிறது. அ.தி.மு.க. தரப்பிலும் மனித நேய மக்கள் கட்சி தங்கள் பக்கம் இருப்பதை விரும்புகிறார்கள். எனவே சட்டசபை தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கும் போது மிக எளிதாக அ.தி.மு.க.வுடன் மனித நேய மக்கள் கட்சி கை கோர்க்கும் என்று கூறப்படுகிறது.

 

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img