முழுமையான மது ஒழிப்பே திமுக.,வின் லட்சியம்: மு.க.ஸ்டாலின் உறுதி

Published:

திருச்சி:

மது ஒழிப்பில் அதிமுகவுக்கு சிறிதும் அக்கறையில்லை; முற்றாக மதுவை ஒழிப்பதே திமுகவின் லட்சியம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தில் பேசினார்.

‘நமக்கு நாமே விடியல் மீட்பு’ பயணத்தின் 13வது நாளான நேற்று திருச்சி மாவட்டம் மணப்பாறை, புங்கனூர், பெல், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, திருவரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருவெறும்பூர் பெல் தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் வைத்து விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், போக்குவரத்து தொழிலாளர்கள், பெல் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது ஸ்டாலின் பேசியது:

நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப்பயணம் மூலம் தமிழக மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறேன். இன்றுடன் முதல் கட்ட சுற்றுப் பயணத்தை முடிக்கிறேன். 2–ம் கட்ட பயணத்தை வருகிற 7–ந்தேதி நீலகிரியில் இருந்து தொடங்க உள்ளேன். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அது 2016 தேர்தலில் நிச்சயம் நடக்கும். தற்போது தமிழகத்தில் நடக்கும் அ.தி.மு.க. ஆட்சி வெறும் காணொலி காட்சிதான். செல்போன் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இங்கு செல்போன் இல்லாமல் இருப்பவர்கள் யார். பெரும்பாலும் இரண்டு செல்போன்கள் அல்லது இரண்டு சிம் கார்டு கொண்ட செல்போன்கள் தான் வைத்திருக்கிறார்கள். சிம் கார்டு வேண்டுமே. கட்டணம் கட்ட வேண்டுமே. அதையெல்லாம் விடுங்கள். செல்போன்ல ஜார்ஜ் ஏற்ற மின்சாரம் கரண்ட் வேண்டுமே.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

கடந்த நான்கரை ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். திமுக ஆட்சியில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடைபெறுகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் தொகுதி மக்களைக்கூட சந்திப்பது கிடை யாது. மக்களை சந்தித்து ஆய்வு நடத்த வேண்டியவர்கள் ஓய்வில் உள்ளனர். ஆனால் ஓய்வில் உள்ள நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம். தமிழக முதல்–அமைச்சர் அரை மணிநேரம் மட்டுமே பணியாற்றி வருகிறார். 110–வது விதி அவசர தேவைக்கு தீர்வு காண்பதற்காகத்தான். ஆனால் ஜெயலலிதாவின் 110–வது விதி தமிழக மக்களின் தலைவிதியாக உள்ளது.

காவிரி நீரை கடைமடைக்கு கொண்டு செல்லும் வாய்க்கால்கள் தூர் வாரப்படவில்லை. மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் சட்டத்தை திமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் எதிர்த்த நிலையில், அதிமுக ஆதரவு கொடுத்தது.

2012 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் தனிநபர் வருமானம் 3 மடங்காக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி ஊதியத்தை கேட்க வேண்டியுள்ளது. புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படாததால் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். நோக்கியா தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மின்பற்றாக்குறை தான். உலக முதலீட்டாளர் மாநாடு மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்பட்ட மாநாடு.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

தமிழகத்தில் மதுவை முற்றிலும் ஒழிப்பதே திமுகவின் இலக்கு. ஆட்சிக்கு வந்ததும் அது நிறைவேறும். ‘தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது’ என்று மதுவிலக்கு துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை மூடும் எண்ணம் அதிமுகவுக்கு சிறிதும் கிடையாது.

தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை 60 சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளது. பெல் தொழிற்சாலை அ.தி.மு.க.விற்கு எதிராக உள்ளதாக கருதி, அதன் வளர்ச்சிக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெல் நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு கொடுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. 37.6 சதவீதமாக இருந்த தனியார் பங்கு, அ.தி.மு.க. ஆட்சியில் 43.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ளவர்களை மட்டும் வேலைக்கு சேர்க்காமல் அகில இந்திய அளவில் வேலைக்கு சேர்க்கிறார்கள்.

– இவ்வாறு அவர் கூறினார்.

 

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img