டாஸ்மாக்குக்கு எதிராக பாடல் : மூடு டாஸ்மாக்கை மூடு பாடலுக்காக பாடகர் கோவன் கைது

சற்றுமுன்

 

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சமூக பிரச்சினைகளை வலியுறுத்தி வீதி நாடகங்களையும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பினர்.

 இந்த அமைப்பை சேர்ந்த பொறுப்பாளரும் பாடகருமான கோவன்(51) ‘‘மூடு டாஸ்மாக்கை மூடு’’ என்ற தலைப்பில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக பாடல் ஒன்றை எழுதி அதனை ஆடியோ மற்றும் வீடியோவாக தயாரித்து அமைப்பின் பெயரில் வெளியிட்டு இருந்தார் .

‘‘ஊருக்கு ஊரு சாராயம்… தள்ளாடுது தமிழகம்’’ என்று தொடங்கும் பாடல் வீடியோவில் டாஸ்மாக் மதுவுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.அ ந்த பாடல் வீடியோ வாட்ஸ்–அப், யூ.டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது.

இதை தொடர்ந்து 124ஏ (தேச துரோகம்), 153 (2 பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல்), 505(1) (குற்றம் செய்ய தூண்டுதல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் கோவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இன்று அதிகாலையில் சென்னை காவல் துறையினர்திருச்சிக்கு விரைந்து சென்றனர்.

திருச்சி உறையூர் அருகே உள்ள மேல பாண்ட மங்கலம் அரவானூரில் கோவனை, அவரது வீட்டில் வைத்து பாடகர் கோவன் கைது செய்தனர். பின்னர் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்

மக்கள் கலை இயக்கிய கழகம் அமைப்பை சேர்ந்தவர்கள் பாடகர் கோவன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து காவல் ஆணையர் அலுவலகம் முன்பு உதவி ஆணையர் அய்யப்பன், ஆய்வாளர் பிரபு ஆகியோர் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் பாடகர் கோவனை பார்ப்பதற்காக வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன், அந்த அமைப்பின் நிர்வாகிகளுடன் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார். கோவனை பார்ப்பதற்காக சென்ற அவர் திரும்பி வந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

திருச்சியில் இருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் பிடித்து வரப்பட்டுள்ள பாடகர் கோவன் எங்கு இருக்கிறான் என்பதை காவல் துறையினர் இதுவரை கூறவில்லை.

இன்று காலையில் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தால் அவரை பார்க்கலாம் என்று ஆய்வாளர் மெல்வின் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக இங்கு வந்தோம். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. பாடகர் கோவனை சந்தித்தும் பேச முடியவில்லை. உயர் அதிகாரிகள் யாரையும் சந்திக்க முடியவில்லை.

எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளோம். அது இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆலோசித்து வருகிறோம் என வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.