திராவிடக் கட்சிகளை வங்கக் கடலில் வீசியெறிய முடிவு எடுக்கவேண்டும்: தமிழருவி மணியன்

Published:

சென்னை:
இரு திராவிடக் கட்சிகளையும் வங்கக் கடலில் வீசியெறிய முடிவு எடுக்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாநகரத்தைச் சிங்கப்பூராக்குவோம் என்று கடந்த 48 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி பீடத்தை அலங்கரித்து வரும் இரண்டு திராவிடக் கட்சிகளும் வாய் கூசாமல் வசீகரமான வார்த்தைகளில் வாக்குறுதி வழங்கின. ஆனால், 5 நாட்கள் பெய்த சாதாரண மழையைக் கூடத் தாங்க முடியாமல் இன்று ஒட்டுமொத்த சென்னையும் தத்தளிக்கிறது. 2005ல் பெய்த பெருமழையில் விளைந்த கடும் சேதங்களைக் கண்ட பின்பும் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் முறையாக மழைநீரைச் சேகரிக்கவும், பழுதடைந்த கால்வாய்களைக் கட்டமைக்கவும், நீர்நிலைகளைத் தூர் வாரவும் உருப்படியாக எந்தப் பணியும் செய்யப்படவில்லை .

நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட 40 ஆயிரம் நீர்நிலைகளில் பெரும்பாலானவை இந்த இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் தீவிர ஆக்கிரமிப்புக்குள்ளாயின. தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள தாழ் நிலங்களெல்லாம் வீடுகட்டும் இடங்களாக மாற்றப்பட்டன. தமிழகத்தில் பாயும் 17 சிறிய, பெரிய ஆறுகள் ஒன்றிணைக்கப்படுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தாமிரபரணி, கருமேனி, நம்பியாறு இணைப்புத் திட்டம் இன்றுவரை முழுமைப்பெறாமல் முடங்கிக்கிடக்கிறது. சரியான திட்டமிடல் இன்மையால் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 177 டி.எம்.சி. தண்ணீர் பயன்பாடின்றி வீணாகிறது. இந்த நிலையில் வெள்ள நிவாரணப் பணிகளால் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை தீர்ந்து விடப்போவதில்லை. புதிது புதிதாய் இலவசத் திட்டங்களை அறிவித்து வாக்கு வங்கியை வளர்த்தெடுப்பதைத் தவிர இந்த இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மக்கள் நலன் காக்கும் திட்டங்களைத் தீட்டுவதில் எந்த அறிவியல் பார்வையும் இல்லை. சீரழிந்து கிடக்கும் சென்னை சீர்பட, தண்ணீரில் மிதக்கும் கடலூர் இயற்கைப் பேரிடரிலிருந்து நிரந்தரமாக விடுபட, மழை நீர் வீணாகாமல் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்பட தமிழகத்து வாக்காளர்கள் இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் வங்கக்கடலில் வீசியெறிவதற்கு முதலில் முடிவெடுக்க வேண்டும்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஊழலற்ற, சமூக நேயத்துடன் சத்தியம் சார்ந்து செயற்படுபவர்களை தேர்தல் களத்தில் தேடிக் கண்டுபிடித்து மாற்று அரசியலை மலரச் செய்ய வேண்டும். ஆயிரம் தவறுகள் இருந்த போதிலும் அரசியல் கருத்து வேற்றுமைகளை மீறி, நிவாரணப் பணிகளில் அனைவரும் ஒன்றினைந்து ஈடுபடுவது தான் இன்றைய அவசரத் தேவை. காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்களும் தங்களால் இயன்ற அளவு விளம்பர வெளிச்சமின்றி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img