தமிழக அரசு பேருந்தை மது போதையில் ஓட்டிய ஓட்டுநர்

சற்றுமுன்

தேனி மாவட்டம் போடியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற அரசுப் பேருந்தில் பணியில் இருந்த ஓட்டுநர் மது போதையில் தாறுமாறாக ஓட்டியதால் பயணிகள் அலறியதை அடுத்து பயணி ஒருவரே மாற்று ஓட்டுநராக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போடி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 3.45 மணிக்கு வேளாங்கண்ணிக்குச் சென்ற போடி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கட்டுப்பாட்டில் உள்ள பேருந்தை, வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் மதிப்புராஜா என்பவர் ஓட்டிச் சென்றார்.

மது போதையில் இருந்த மதிப்புராஜா, போடியில் இருந்து தடுமாறியவாறு தாறுமாறாகபேருந்தை ஓட்டிச் சென்றதாகக் சொல்லப்படுகிறது. தேனி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது, அவர் நிதானத்தை இழந்து பேருந்தை தாறுமாறாக ஓட்டியதால், பயணிகள் அலறியுள்ளனர். இதையடுத்து பேருந்தில் குடும்பத்துடன் பயணம் செய்த தேனியைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் சுல்தான் இப்ராஹிம், மாற்று ஓட்டுநராக மாறி பேருந்தை தொடர்ந்து ஓட்டிச் சென்றார். போதையில் இருந்த மதிப்புராஜா வத்தலகுண்டில் இறக்கிவிடப்பட்டுள்ளார். தொடர்ந்து பேருந்தை திண்டுக்கல்லுக்கு ஓட்டிச் சென்ற சுல்தான் இப்ராஹிம், பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகப் பணி மனையில் பேருந்தை நிறுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அரசுப் போக்குவரத்துக் கழக தேனி மண்டல மேலாளர் ஆனந்தனிடம் கேட்டதற்கு, பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால், மாற்று ஓட்டுநர் மூலம் பேருந்து இயக்கப்பட்டது. போதையில் இருந்த ஓட்டுநர் மதிப்புராஜாமீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.