விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்துக்கு வரும் இன்றும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு வரும் 19 -ஆம் தேதியும் தண்ணீர் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. அதேபோல காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு வரும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதன் மூலம், கோபி, அந்தியூர், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி ஆகிய 6 வட்டங்களைச் சார்ந்த 40, 247 ஏக்கர் பாசன வசதி பெறும். விவசாயிகள், இந்நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மையைக் கடைப்பிடித்து அதிக மகசூல் பெற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஆணையில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




